TET Exam: டெட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளது. இதனால் அரசு பள்ளி ஆசியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET - Teacher Eligibility Test) எழுதுவது கட்டாயம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்பு இந்த உத்தரவை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.ஆசிரியர் பணியில் உள்ளவர்களின் கற்பித்தல் திறனையும், தகுதியையும் உறுதிப்படுத்துவதற்காகவும், அரசு பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் டெட் தேர்வு வழிவகுக்கும் என்று கூறியது.
24
ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு கட்டாயம்
நீதிமன்றத்தின் உத்தரவு தற்போது பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் எதிர்காலத்தில் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் அனைவருக்கும் பொருந்தும். TET தேர்வு, ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், பாடத்திட்ட அறிவு மற்றும் கல்வி முறைகளில் திறமையை மதிப்பிடுவதற்கு ஒரு முக்கியமான அளவுகோலாக உள்ளது. இந்தத் தேர்வை வெற்றிகரமாக முடிப்பது, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு திறம்பட கற்பிக்க தேவையான அடிப்படைத் திறன்களைக் கொண்டிருப்பதை உறுதி செய்கிறது.
ஆசிரியர்கள் அச்சம்
நீதிமன்றத்தின் உத்தரவால் ஆசிரியர்கள் மத்தியில் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன. ஒரு பக்கம், இது கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு உதவும் என்று ஆதரவாளர்கள் கருதுகின்றனர். மறுபுறம், ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு இது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தலாம் என்று சிலர் அச்சம் தெரிவிக்கின்றனர். இருப்பினும், இந்த முடிவு அரசு பள்ளி மாணவர்களின் நலனை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
34
உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்
மேலும் இந்த உத்தரவை செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு தேவையான வழிகாட்டுதல்களையும், ஆசிரியர்களுக்கு உதவும் பயிற்சி திட்டங்களையும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில், டெட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ''டெட் தேர்வு தொடர்பான தீர்ப்பு வந்ததுமே முதல்வர் ஸ்டாலின் லண்டனில் இருந்தவாறு தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டார். இது தொடர்பாக ஆசிரியர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் தான் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழக அரசு ஆசிரியர்களுக்கு என்றும் துணை நிற்கும். அதே வேளையில் எதிர்கால நியமனத்தில் டெட் தேர்வு கட்டாயம் என்பதை தமிழ்நாடு அரசு முழுமையாக ஆதரிக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.