உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, கோயில் நிர்வாகம் சார்பில் தேர்வு செய்யப்படும் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மற்றும் தேவையான அரசு அதிகாரிகள் மட்டுமே தீபம் ஏற்றும் இடத்திற்குச் செல்ல முடியும். பொதுமக்களுக்கு அங்கு செல்ல அனுமதி கிடையாது. ஊர்வலம், கூட்டம் கூடுதல், முழக்கங்கள் எழுப்புதல், ஆர்ப்பாட்டம் போன்றவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபம் ஏற்றுவதற்கான குழுவின் எண்ணிக்கை மற்றும் அமைப்பை மதுரை மாவட்ட ஆட்சியர், கோயில் செயல் அலுவலர், தொல்லியல் துறை மற்றும் காவல் ஆணையருடன் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்: மாவட்ட ஆட்சியருக்கு பொறுப்பு
தீபம் ஏற்றுவதற்கான நேரம், செல்லும் வழி, நிகழ்ச்சியின் கால அளவு உள்ளிட்டவற்றை மாவட்ட நிர்வாகம் தீர்மானிக்க வேண்டும். தொல்லியல் சின்னங்கள் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் தொல்லியல் துறை நிபந்தனைகளை வகுக்க வேண்டும். புதிய கட்டுமானம், அகழாய்வு, நிரந்தர அமைப்பு அல்லது கட்டமைப்பு மாற்றங்களுக்கு அனுமதி இல்லை. தர்கா மற்றும் மசூதியின் வழிபாட்டு நடவடிக்கைகளுக்கும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது. விழா முடிந்ததும் அனுமதிக்கப்பட்ட குழுவினர் உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும். விழா முடிந்த மூன்று நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.