கவின் படுகொலையில் எனது அப்பா, அம்மாவுக்கு தொடர்பு இல்லை என்று சொல்லும் சுபாஷினி யாருடைய கட்டுப்பாட்டிலோ இருப்பது போல் தெரிவதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின்குமார் தனது பள்ளித் தோழியும், சித்த மருத்துவருமான திருநெல்வேலி மாவட்டம் கேடிசி நகர் பகுதியில் வசித்து வரும் சுபாஷினி என்பவரை காதலித்து வந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், இவர்களது காதல் சுபாஷினியின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஞாயிற்றுக் கிழமை மருத்துவமனைக்கு வந்த கவினை, சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித் வெட்டி படுகொலை செய்தார்.
24
காதலுக்கு எதிர்ப்பு
லட்சங்களில் மாத சம்பளம் வாங்கும் மென்பொறியாளர் கவினின் ஆணவப் படுகொலை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சுபாஷியின் தாய், தந்தை என இருவரும் காவல் உதவி ஆய்வாளர்களாக இருக்கும் நிலையில், இருவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கவினின் உறவினர்கள், கவினின் உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் அழுத்தத்தின் காரணமாக சுபாஷினியின் பெற்றோர் இருவரும் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு, தந்தை சரவணன் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டள்ளார்.
34
கவின் வீட்டில் திருமாவளவன்
இந்நிலையில் வியாழக்கிழமை கவினின் வீட்டிற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் கவினின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் சொன்னார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “சுபாஷினி பேசியது போன்ற ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில், கவினுக்கும், எனக்கும் இடையேயான உறவு எங்களுக்கு மட்டுமே தெரியும். இது பற்றி தெரியாமல் யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
சுபாஷினி பேசும் விதம், உடல் மொழியைப் பார்க்கும் போது அவர் யாருடைய கட்டுப்பாட்டிலோ, அச்சுறுத்தலிலோ இருப்பது போல் தெரிகிறது. இந்த கொலை சம்பவத்திற்கும், எனது தாய், தந்தைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று சொல்கிறார். ஆனால் கவினுக்கு இப்படி ஒரு நிலை வந்துவிடக் கூடாது என தனது பெற்றோரிடமோ அல்லது சகோதரரிடமோ சொல்லி தடுத்திருக்கலாம். ஆனால், அவர் அப்படி செய்ததாக தெரியவில்லை. சாதியவாத அமைப்புகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி கவினின் நடவடிக்கைகளை கொச்சை படுத்தும் வகையில் அவதூறுகளைப் பரப்புகிறார்கள். இது தேவையற்ற சமூக பதற்றத்தை ஏற்படுத்துகிறது. அவ்வாறு அவதூறு பரப்பும் நபர்கள் மீது சைபர் கிரைம் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.