விலகியது வடகிழக்கு பருவமழை- தென் மாவட்டங்களை விடாமல் துரத்தும் கன மழை
விலகியது வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் மத்தியில் தொடங்கியது. சுமார் 104 நாட்கள் நீடித்த பருவமழையால் பரவலாக நல்ல மழை கிடைத்தது. இதனால் நீர் பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் நிரம்பியது.
எனவே 2025ஆம் ஆண்டில் பெரிய அளவில் தண்ணீர் பிரச்சனை ஏற்படாத வகையில் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளிலிருந்து இன்று (27-01-2025) விலகியதாக சென்னை வானிலை ஆய்வு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வறண்ட வானிலை
இதனையடுத்து 27-01-2025 முதல் 29-01-2025 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற 30ஆம் தேதி தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
விடாமல் துரத்தும் கன மழை
வருகிற 31-01-2025: தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
01-02-2025: தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (28-01-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.