
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான பழைய வழக்குகள் தோண்டி எடுக்கப்பட்டு ஸ்கெட்ச் போடப்படுகிறது. இதனால் அதிமுகவிற்கு தேர்தல் களம் கடும் சவாலாக அமையும் என சில நாட்களாக கோட்டை வட்டாரத்தில் தகவல்கள் பரப்பை கிளப்புகின்றன.
கடந்து 2011 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில் முக்கியமான துறைகளின் அமைச்சராக கோலோச்சியவர் எஸ்.பி.வேலுமணி. ஜெயலலிதாவின் அமைச்சரவைகள் பவர்ஃபுல்லாக இருந்தவர். பின்னர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் பவர் சென்டராகவே மாறிப்போனார். இன்றைய சூழலில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்து நம்பர் டூ பொசிஷனில் இருப்பதோடு கணிசமான தொகுதிகளை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர் எஸ்.பி.வேலுமணி. இந்த நிலையில் அவருக்கு எதிரான பழைய வழக்குகளை ஆளும் திமுக தோண்டி எடுத்து அவருக்கு ஷாக் கொடுக்க திட்டமிட்டுள்ளது.
இதன் உள்விவகாரங்களைஅறிந்த தலைமைச் செயலக அதிகாரிகள் கூறுகையில், “அதிமுக ஆட்சியின் போது எஸ்.பி.வேலுமணி மீதான புகார்கள் வெடித்துக் கிளம்பின. கடந்த தேர்தலில் உதயநிதி பிரதானமாக வைத்தது உள்ளாட்சித் துறை விவகாரங்களைத்தான். தனது பிரச்சார மேடைகளில் பிளீச்சிங் பவுடர், துடைப்பங்களை மக்களிடம் காட்டி, இதோடு விலை இவ்வளவு தான். ஆனால் வேலுமணி போட்டதோ அவ்வளவு என்று கடுமையாக விமர்சித்தார். திமுக மட்டும் இல்லாமல் அறப்போர் இயக்கம் போன்றவை வேலுமணி துறைகளில்க் ஊழல் நடந்திருப்பதாக சுட்டிக்காட்டின. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலும் ஊழல் நடந்திருப்பதாக புகார்கள் வெடித்தன. இவற்றையெல்லாம் வேலுமணி கடுமையாக மறுத்து வந்தார்.
இந்நிலையில் திமுக அதிகாரத்திற்கு வந்ததும் அடுத்தடுத்த அதிமுக அமைச்சர்கள் மீது ரெய்டுகள் நடந்தன. வேலுமணியும் ரவுண்டு கட்டப்பட்டார். குறிப்பாக ஸ்மார்ட் சிட்டி முறைகேடுகளை விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்த பரப்பரப்புக்கு இடையில் மேலும் லஞ்ச ஒழிப்பு துறையும் பாய்ச்சல் காட்டியது. தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் தெருவிளக்கு மாற்றியதில் முறைகேடு என்று புகார் பட்டியல் வாசித்தனர். அவர் மீது வழக்குகள் பதிவாகின. கோவையில் வேலுமணி தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.
தமிழகத்தின் சுமார் எட்டு லட்சம் எல்.இ.டி பல்புகள் பொருத்தும் திட்டத்திற்கு ஆயிரம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டதாகவும், அதன் மூலம் சுமார் 900 ரூபாய் மதிப்புள்ள ஒரு பல்பினை 6000 ரூபாய் கொடுத்து வாங்கியதாக பில் போடப்பட்டு 500 கோடி வரை முறைகேடுகள் சுட்டிக்காட்டப்பட்டது. இதில் வேலுமணி மற்றும் சில நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை புகார் பதிவு செய்தது. கூடவே சுமார் 10,000 கோடி தமிழகத்தின் பல்வேறு மாநகராட்சிகளில் நடந்த ஸ்மார்ட் சிட்டி பணிகள் கணிசமான முறைகேட்டு சர்ச்சைகள் சுற்றி வளைத்தன. ஆனால் வழக்கு பாய்ச்சலோடு எல்லாம் சைலன்டானது.
எஸ்.பி.வேலுமணியும் வழக்கம் போல் அரசியல் பயணத்தை சுமுகமாகவே தொடர்ந்தார். இந்நிலையில் அதிமுகவில் அதிகாரம் மையமாகவே வலம் வந்தவரும், எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் சர்ச்சைகள் வழக்குகளில் முக்கிய புள்ளியாக சுட்டப்பட்டவருமான பொறியாளர் சந்திரசேகர் திடீரென எஸ்.பி.வேலுமணியோடு முரண்பட்டு கட்சியை விட்டு விலகினார். ஆனாலும் வேலுமணி அலட்டிக் கொள்ளவில்லை. இதற்கிடைடே பாஜகவின் தேசிய தலைமையோடு மிகவும் நெருங்கினார் வேலுமணி. அதிமுக- பாஜக கூட்டணி மீண்டும் உருவாக முக்கிய காரணமே வேலுமணி தான். இதெல்லாம் திமுகவை டென்ஷனாக்கின.
இதனால் பொறியாளர் சந்திரசேகரை அப்ரூவராக்கி வேலுமணியின் மொத்த அரசியல் வாழ்வையும் திமுக காலி பண்ண போகிறது என்று தொடர்ந்து பேச்சுகள் அடிபட்டன. ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை. இப்போது சூழல் வேறு திசையில் பயணிக்க துவங்கியிருக்கிறது. திமுக ஆட்சிக்கு அதிமுக கடும் டஃப் கொடுக்கிறது. குறிப்பாக வேலுமணி கட்டுப்பாட்டில் இருக்கும் 10 தொகுதிகள் கொண்ட கோவை உட்பட நான்கு மாவட்டங்கள் திமுகவிற்கு கடும் சவாலாக உள்ளன. இதை எப்படி உடைக்கலாம் என்று யோசித்த திமுக, வேலுமணிக்கு எதிரான வழக்குகளை தூசி தட்டி எடுக்கும் வேலைகளில் இறங்கி இருக்கிறது என்கிறார்கள்.
வழக்குகளில் அதிரடி திருப்பங்கள் உருவானால் அது வேலுமணியை அரசியல் செய்ய விடாமல் தடுத்து பதற்றத்தை உருவாக்கும். இதையெல்லாம் ஸ்மெல் செய்துவிட்டு வேலுமணி தன்னை தற்காத்துக் கொள்ளும் முயற்சிகளில் இறங்கிவிட்டார். பிரிந்து போன பொறியாளர் சந்திரசேகரை சமீபத்தில் மீண்டும் அதிமுகவில் இணைந்து பழையபடி வேலுமணியின் நிழலாக மாற்றியுள்ளார். மேலும் சில முயற்சிகளையும் எடுத்து வருகிறார்’’ என்கிறார்கள்.