ஓலா, உபேர் செயலிகளில் இனி ஆட்டோ, கார்களை இயக்க போவதில்லை
ஆட்டோவில் பயணம் செய்வதற்காக முக்கிய சாலைக்கு வந்து அங்கிருக்கும் ஆட்டோக்களை பிடித்து பயணிக்கும் காலம் மலையேறிவிட்டது. நவீன காலத்திற்கு ஏற்ப இருக்கிற இடத்திற்கே ஆட்டோர்கள், கார்களை ஆன்லைனில் நாம் இருக்கிற இடத்தை பதிவு செய்து புக்கிங் செய்தால் போதும் அடுத்த சில நிமிடங்களில் வந்துவிடும். அந்த அளவிற்கு நவீன தொழில்நுட்பம் வளந்துவிட்டது. ஆரம்பத்தில் ஓலா உபேர் போன்ற நிறுவனங்கள் ஓட்டுநர்களுக்கு அதிக பணத்தை கொடுத்து வந்தது. நாட்கள் செல்ல செல்ல பணத்தை குறைத்து விட்டது.
ஆட்டோவுக்கான மீட்டர் கட்டணம்
இதனால் ஓட்டுநர்கள் பாதிக்கப்படுள்ளனர். மேலும் ஆட்டோவுக்கான மீட்டர் கட்டணத்தை அரசு மாற்றி அமைக்காததை கண்டித்துள்ள ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பினர், அரசின் ஒப்புதல் இல்லாமல் தாங்களே புதிய கட்டணத்தை மாற்றி அமைத்து அறிவித்துள்ளனர். ஆட்டோவுக்கான மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்காத தமிழ்நாடு அரசை கண்டித்தும், ola uber செயலிகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்தும் ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பினர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
புதிய கட்டணம் அறிவிப்பு
அப்போது பேசிய உரிமைக் குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜாஹிர் ஹுசேன், 1.8 கிமீ க்கு 25 ரூபாய், அதன் பின் ஒவ்வொரு கூடுதல் கிமீ க்கு 12 ரூபாய் என அமலில் உள்ள ஆட்டோ கட்டணத்தை மாற்றி அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை கட்டணத்தை மாற்றி அமைக்கவில்லை என தெரிவித்தார்.
விலைவாசி உயர்வு, வாகன உதிரிபாகங்கள் விலை உயர்வு, இன்சூரன்ஸ் , ஆர் டி ஓ கட்டண உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆட்டோ மீட்டர் கட்டணத்தை வரும் 1/2/2025 முதல் அமலாகும் வகையில் தாங்களே மாற்றி அமைத்துள்ளதாக தெரிவித்தார்.
ஓலா, உபேர் செயலிகளில் இனி இயக்க மாட்டோம்
அதன்படி முதல் 1.8 கிமீ க்கு குறைந்தபட்ச கட்டணமாக 50 ரூபாயும், கூடுதல் கட்டணமாக ஒவ்வொரு கிமீ க்கும் 18 ரூபாயும் , காத்திருப்பு கட்டணமாக ஒரு நிமிடத்திற்கு 1.50 ரூபாயும் வசூல் செய்யப்படும் என அறிவித்தார். இதே போல் ஆட்டோ மற்றும் கார்களை இனி ola uber செயலிகளில் இணைத்து இயக்க போவதில்லை என முடிவெடுத்துள்ளதாக ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
Ola uber போன்ற நிறுவனங்கள் ஓட்டுநர்களிடம் இருந்து 25 சதவீதம் வரை கமிஷனாக எடுத்துக் கொள்வதாகவும், அதனால் Ola uber க்கு பதிலாக இனி நம்ம யாத்திரி நிறுவனம் மூலம் மட்டுமே வாகனங்களை இயக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.