
தமிழகத்தின் முதன்மை ஆறுகளில் ஒன்றான காவிரி தண்ணீருக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது. காவிரி மட்டுமல்ல, அந்த நீரை நம்பிருக்கும் டெல்டா மாவட்ட விவசாயிகள் முழுவதும் தங்கள் வாழ்வாதாரத்துக்காக தண்ணீருக்காக கண்ணீருடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். கல் நெஞ்சம் கொண்ட கர்நாடகா மனது வைத்தால் தான் காவிரி கரைபுரண்டோடும் நிலை இன்றல்ல; நேற்றல்ல பல ஆண்டு காலமாக தொடரும் வேதனையாக உள்ளது.
தமிழகத்தின் வற்றாத ஒரே ஜீவ நதி
காவிரி மட்டுமல்ல தமிழகத்தில் ஓடும் வைகை உள்பட பெரும்பாலான ஆறுகள் அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும் வடகிழக்குப் பருவமழையையும், கேரளா, கர்நாடகம் என அண்டை மாநிலங்களையும் சார்ந்து இருக்கும் பருவக்கால ஆறுகளாகும். இதனால் தான் கோடைகாலத்தில் பிற ஆறுகளில் நீர் வற்றிவிடுகிறது. ஆனால் தமிழகத்தில் வருடம் முழுவதும் தண்ணீர் ஓடும் வற்றாத ஒரே ஜீவ நதி ஒன்று உள்ளது.
''என்ன தமிழகத்தில் 365 நாளும் ஒரு ஆற்றில் தண்ணீர் ஓடுகிறதா? அதிசயமாக இருக்கே'' என நீங்கள் கேட்பது எனக்கு தெரிகிறது. ஆம்.. தமிழகத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடும் ஒரே வற்றாத ஜீவ நதி தாமிரபரணி. தமிழகத்தின் மற்ற ஆறுகள் தண்ணீருக்காக அண்டை மாநிலங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்க தாமிரபரணி மட்டும் யார் உதவியும் தேவையில்லாமல் ஆண்டு முழுவதும் தனது கடமையை செவ்வனே செய்து கொன்டிருக்கிறது.
தாமிரபரணியில் மட்டும் தண்ணீர் எப்படி?
மற்ற ஆறுகள் கோடை காலத்தில், பருவமழை பொய்த்துப் போனால் வறண்டு விடும் நிலையில், தாமிரபரணி மட்டும் எப்படி 365 நாளும் உயிர்ப்புடன் உள்ளது? என நீங்கள் கேட்கலாம். நான் மேலே சொன்னபடி மற்ற ஆறுகள் வடகிழக்குப் பருவமழையையும், அண்டை மாநிலங்களின் மழையையும் சார்ந்து இருக்கின்றன. ஆனால் தாமிரபரணி ஆறு பாயும் பொதிகை மலைப்பகுதி தென்மேற்குப் பருவமழை (ஜூன் – செப்டம்பர்) மற்றும் வடகிழக்குப் பருவமழை ஆகிய இரண்டு பருவமழைகளின் பலனையும் நேரடியாகப் பெறுகிறது.
மேலும், தாமிரபரணி உற்பத்தியாகும் பகுதியிலுள்ள அடர்ந்த பசுமை மாறா மழைக்காடுகள் நீரைச் சேமித்து வைத்து, மழை இல்லாத காலங்களிலும் சிறுகச் சிறுக நீரூற்றுகளாக ஆண்டு முழுவதும் ஆற்றில் நீரை வெளியேற்றுகின்றன. ஆண்டுதோறும் ஓய்வில்லாமல் ஓடும் தாமிரபரணி திருநெல்வேலி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பொதிகை மலையின் (அகஸ்தியர் கூடம்) உச்சியில் சுமார் 1,725 மீட்டர் உயரத்தில் உற்பத்தியாகிறது.
பொதிகை மலையில் தனது பயணத்தை தொடங்கும் தாமிரபரணி சுமார் 128 கிமீ பயணித்து தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் அருகே மன்னார் வளைகுடாவில் கடலில் கலந்து தனது பயணத்தை நிறைவு செய்கிறது. இந்த ஆற்று நீரில் தாமிரச் சத்து (Copper) அதிகமாக இருப்பதால், நீர் தாமிர நிறத்தில் மிளிர்கிறது. இதனால் 'தாமிரம்' + 'பரணி' இணைந்து தாமிரபரணி என்று பெயர் பெற்றதாக தகவல்கள் கூறுகின்றன.
தாமிரபரணி நீரைத் தேக்கும் அணைகள்
காரையாறு, சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனாநதி, பச்சையாறு மற்றும் சிற்றாறு ஆகியவை தாமிரபரணியின் முக்கியத் துணை ஆறுகளாக விளங்கி வருகின்றன. தாமிபரணியின் குறுக்கே முதலில் பிரம்மாண்டமான பாபநாசம் அணை உள்ளது. இது மட்டுமின்றி மணிமுத்தாறு அணை, சேர்வலாறு அணை, கடனாநதி அணை ஆகிய பிரதான அணைகளும், தலையணை, கன்னடியன் அணைக்கட்டு, அரியநாயகிபுரம் அணைக்கட்டு, மருதூர் அணைக்கட்டு மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு உள்ளிட்ட முக்கியத் தடுப்பணைகளும் தாமிரபரணியின் வேகத்தை கட்டுப்படுத்துகின்றன.
ஆண்டு முழுவதும் ஓடும் தாமிரபரணி மற்றும் அதன் துணை ஆறுகள் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நஞ்சை நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறுகின்றன. தாமிரபரணி கூட்டுக்குடிநீர்த் திட்டங்கள் வாயிலாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர்,மற்றும் இராமநாதபுரம் ஆகிய 5 தென் மாவட்ட மக்களின் தாகம் தீர்த்து வைக்கப்படுகிறது.
வற்றாத ஜீவநதியை நாம் மாசுப்படுத்தலாமா?
இப்படியாக காவிரி, வைகை என தமிழகத்தின் மற்ற ஆறுகள் காலை வாரிவிட இயற்கை அன்னையின் கருணையினால் தாமிரபரணி தனது இடைநில்லா சேவையை வருடம் முழுவதும் தொடர்ந்து வருகிறது. ஆனால் சுயநலத்தை முதன்மையான கொண்டவர்கள் செய்யும் ஆக்கிரமிப்பு, நெகிழி, சாய கழிவுகள் கலப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால் தாமிரபரணி தாய் பொலிவை இழந்து அழிவை நோக்கி சென்று கொன்டிருக்கிறாள். தமிழகத்துக்கே பெருமை சேர்க்கும் தாமிரபரணியை காப்பது நமது தலையாய கடமை அல்லவா.