தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுப்பெற்று வருவதால் முதல்வர் ஸ்டாலின் பதற்றத்தில் இருக்கிறார். அதன் காரணமாக தான் அமித்ஷா மீது அவதூறுகளை பரப்புவதாக முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாட்டாளி மக்கள் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது கூட்டணிக்கு பலத்தை சேர்த்துள்ளது. திமுக, காங்கிரஸ் கூட்டணி வலுவிழந்து உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெற்று வருவது திமுக தலைவர் ஸ்டாலினை பதற்றம் அடைய வைத்துள்ளது. அதனால் தான் மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறான கருத்துக்களை பேசி வருகிறார்.
24
சவால் விட தயாரா..?
அமித்ஷா திமுகவை இந்துக்களுக்கு எதிரான கட்சி எனக் கூறியதற்கு இப்படி பேசும் முதல்வர், திமுகவை ஊழல் கட்சி என்றும் குறிப்பிட்டார், அதற்காக செந்தில் பாலாஜி, பொன்முடி, நேரு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை என சவால் விட முடியுமா?
34
கோவிலை இடிக்க யாருக்கும் உரிமை இல்லை
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வந்துள்ள தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்யப் போவதாக ரகுபதி கூறியுள்ளது கண்டனத்துக்குரியது, இந்த தீர்ப்பால் அமைச்சர் சேகர்பாபு பதற்றம் அடைந்துள்ளார். திருப்பூரில் மக்கள் வழிபட்டு வந்த முருகன் கோவிலை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த காடேஸ்வர சுப்ரமணியன் கைது செய்யப்பட்டுள்ளார். மக்கள் வழிபடும் கோவிலை இடிக்க எந்த தார்மீக உரிமையும் இவர்களுக்கு இல்லை.
விஜய் உதிரியாக இல்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும்
நீதிபதி ஜி.ஆர். சாமிநாதனுக்கு எதிராக கையெழுத்திட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் மன்னிப்பு கேட்க வேண்டும். முதல்வர், அமைச்சர் ரகுபதி என அனைவரையும் விசாரிக்க வேண்டும். திமுக, காங்கிரஸ் கூட்டணி தான் வலுவிழந்துள்ளது. காங்கிரஸின் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி, ஜோதிமணி ஆகியோர் பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர். திமுகவோடு இருப்பதா, தவெக செல்வதா என காங்கிரஸ் பேசி வருகிறது. எனவே அவர்களது கூட்டணியை திமுக முதலில் பரிசோதனை செய்ய வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி பலம் பெற்று வருகிறது. திமுகவை எதிர்ப்பதில் விஜய் உதிரியாக இல்லாமல் ஒற்றுமையாக உறுதியாக எதிர்த்தால் தான் திமுகவை வீழ்த்த முடியும் என கூறினார்.