Internal complaints committee in companies where women work : தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் அதிகளவில் பணியில் உள்ளனர். இந்த நிலையில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகங்களில் பாலியல் ரீதியாக பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். இதனை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள்ப்பட்டு வருகிறது. அந்த வகையில் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் அனைத்து நிறுவனங்களிலும் "உள்ளக புகார் குழுக்கள்" அமைக்கும் படி சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.
"உள்ளக புகார் குழுக்கள்"
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாவட்டத்தில் 10 க்கும் மேற்பட்டோர் பெண்கள் பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள், அரசு சாராநிறுவனங்கள். வியாபார நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், மென்பொருள் தொழில் நுட்ப நிறுவனம் போன்றவற்றில்
"பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம் 2013" பிரிவு 4 ன்படி பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் "உள்ளக புகார் குழுக்கள்" (Internal Committee) அமைக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் அறிக்கை
இக்குழுவில் குறைந்த பட்சம் 4 உறுப்பினர்களை கொண்டு அமைக்க வேண்டும். அவற்றில் 50% பெண் உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஒவ்வொரு நிறுவனங்களிலும் பாதிக்கப்படும் பெண்கள் தங்களது பிரச்சனைகளை தெரிவிக்க புகார் பெட்டி ஒன்றை அமைக்க வேண்டும். புகார் பெறப்பட்டவுடன் உள்ளக புகார் குழு (Internal Committee) உறுப்பினர்களை கொண்டு விசாரணை மேற்கொள்ளப்படும்.
உள்ளக புகார் குழுவில் பதிவு செய்யப்படும் புகார் மற்றும் நடவடிக்கை குறித்து வருடத்திற்கு ஒருமுறை மாவட்ட சமூக நல அலுவலத்தில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் வருடாந்திர அறிக்கையாக அனைத்து நிறுவனமூம் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வழங்கப்பட வேண்டும்.
"உள்ளூர் புகார் குழு"
அமைப்பு சாரா பெண்களின் பாதுகாப்பிற்காக மாவட்ட ஆட்சியரால் ஒவ்வொரு மாவட்டத்திலும் "உள்ளூர் புகார் குழு" ஏற்படுத்தப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் பிரிவு 6 ன்படி 10 க்கும் குறைவாகவுள்ள நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் பாதிக்கப்பட்டால் அந்நபர் தன்னை பணியமர்த்தியவருக்கு எதிராக நேரடியாக அனைத்து மாவட்டங்களில் செயல்படும் "உள்ளூர் புகார் குழு" (Local Committee) ல் மனு அளிக்க சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.
குழு அமைக்கப்படாத நிறுவனங்களுக்கு தண்டனைவிவரம்
உள்ளக புகார் குழு அமைக்கப்படாமல் இருந்தாலோ அல்லது புகார் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் இருந்தாலோ, சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமம் அல்லது பதிவு இரத்து செய்யப்படும்.
இப்புகார் குழு ஏற்படுத்தாத நிறுவனங்களின் உரிமையாளருக்கு ரூ. 50,000/-வரை அபராதம் செலுத்த நேரிடும். பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகார்களைwww.shebox.nic.in என்ற இணையதள முகவரியில் புகார்களை பதிவுசெய்யலாம்,
எனவே. சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து நிறுவனங்களிலும் உள்ளக புகார் குழு ஏற்படுத்துமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும், தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் (https://www.tnswd.poshicc.tn.gov.in) என்ற இணையதள முகவரியில் அனைத்து நிறுவனங்களின் உள்ளக புகார் குழு வின் விவரங்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.