விவசாயிகளும்- இயற்கையும்
விவசாயத்தை நம்பி தான் மக்கள் உள்ளனர். உண்ண உணவு இல்லையென்றால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் மக்கள் சோற்றில் கை வைக்க முடியும். இந்த நிலையில் விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் கன மழையாலும், வறட்சியாலும் பாதிக்கப்படுவார்கள்.
அவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது பயிர்கள் விளைச்சல் முடிவடைந்த நிலையில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது திடீரென பெய்த மழையின் காரணமாக நெல்கள் மழையில் நனைந்து விட்டது.
மழையால் நெற்பயிற் பாதிப்பு
எனவே ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தமிழக அரசு சார்பாக மத்திய அரசுக்கு கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதன் படி, உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் 2002- 2003 காரிஃப் பருவம் முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முகவராக செயல்பட்டு ஆண்டுதோறும் அக்டோபர் முதல் நாள் முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.
farmers
முன் கூட்டியே நெல் கொள்முதல்
வடகிழக்குப் பருவமழை காரணமாக செப்டம்பர் மாதம் முதல் நாளிலிருந்து கொள்முதல் செய்தால் டெல்ட்டா விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் முதலமைச்சர் அவர்கள் பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில் 2022- 2023 காரிஃப் சந்தைப் பருவத்திலிருந்து செப்டம்பர் முதல் நாளிலிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
01.09.2024 முதல் 17.01.2025 வரை 1349 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 80,634 விவசாயிகளிடமிருந்து 5,72,464 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 1378 கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்கு எண்களுக்குச் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழையில் பாதித்த நெற்பயிற்கள்
மேலும், நாளது தேதி வரை ஒன்றிய அரசு அனுமதித்துள்ள 17% ஈரப்பதத்தில் தொடர்ந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டு காலதாமதமாகத் தொடங்கியதாலும் தொடர்ச்சியாக வடகிழக்குப் பருவமழை பெய்து வருவதாலும் குறிப்பாக டெல்ட்டா மாவட்டங்களில் கடந்த ஒருவார காலமாக விட்டு விட்டு கனமழை பெய்துள்ளதாலும் அறுவடை செய்யும் நெல் மணிகள் அதிக ஈரப்பதத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல் கொள்முதல்
மேலும் வானம் மேகமூட்டத்துடனும், தொடர்ந்து பனிப்பொழிவுடனும் உள்ளதால் விவசாயிகள் நெல்லினை உலரவைக்கச் சிரமப்படுவதால் அதிக ஈரப்பதத்தில் உள்ள நெல் மணிகளைக் கொள்முதல் செய்ய விவசாயிகள், விவசாய சங்கத் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் தற்போது 17% ஈரப்பதத்தில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதைத் தளர்வு செய்து 22% ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கக் கோரி கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவிக்கப்பட்டுள்ளது.