ரூபாய் 499க்கு அமுதம் ரேஷன் கடையில் 15 மளிகை பொருட்கள்.! தீபாவளிக்கு சூப்பர் திட்டத்தை தொடங்கிய தமிழக அரசு

First Published | Oct 22, 2024, 2:19 PM IST

தமிழக அரசு, அமுதம் அங்காடிகள் மற்றும் நியாய விலைக் கடைகள் மூலம் 499 ரூபாய்க்கு 15 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை 'அமுதம் பிளஸ்' என்ற பெயரில் விற்பனை செய்கிறது. இந்தத் திட்டம் மக்களுக்கு அத்தியாவசிய மளிகைப் பொருட்களை குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும்.

நியாயவிலைக்கடையில் உணவு பொருட்கள்

தமிழக அரசு சார்பாக மக்கள் நல திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏழை மற்றும் எளிய மக்களுக்கு குறைந்த விலையில் உணவு பொருட்களை வழங்கும் வகையில் நியாயவிலைக்கடையில் அரிசி, பருப்பு, சக்கரை, பாமாயில், மண்ணெண்ணெய் போன்றவை வழங்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மட்டும் 2 கோடியே 24 லட்சத்து 50 ஆயிரத்து 119 மின்னணு குடும்ப அட்டைகளில் உள்ள சுமார் 7 கோடியே 2 லட்சம் பயணாளிகள் பயனடைந்து வருகின்றனர்.

இதனிடையே தனியார் மளிகை கடைகளுக்கு போட்டியாக தமிழக அரசின் அமுதம் அங்காடி செயல்பட்டு வருகிறது. சென்னையில் நுகர்ப்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் அமுதம் அங்காடிகளான பல்பொருள் விற்பனை அங்காடி  மற்றும் நியாய விலைக்கடைகளில் 499 ரூபாய்க்கு  15 மளிகைப் பொருள் அடங்கிய தொகுப்புகளின் விற்பனையை கோபாலபுரத்தில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்.  '

அமுதம் பிளஸ் ' எனும் பெயரில் விற்பனை செய்யப்படும் 3.8 கிலோ கிராம் எடை கொண்ட மளிகைத் தொகுப்பில் பண்டிகை காலங்களை கவனத்தில் கொண்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தப்படும் 15 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய அமுதம் பிளஸ் மளிகை தொகுப்பு திட்டத்தில் வழங்கப்படுகிறது

Tap to resize

என்ன, என்ன மளிகை பொருட்கள்

மஞ்சள் தூள் 50 கிராம், உப்பு 1 கிலோ,கடுகு 125 கிராம், சீரகம் 100 கிராம், வெந்தயம்100 கிராம், சோம்பு 50 கிராம், மிளகு 50 கிராம், மிளகாய் 250 கிராம், தனியா 500 கிராம்,  புளி 500 கிராம்  உளுத்தம் பருப்பு 500 கிராம், கடலைப்பருப்பு 200 கிராம்,பாசிப்பருப்பு 200 கிராம்,வறு கடலை 200 கிராம், பெருங்காயத்தூள் 15 கிராம் ஆகியவை தொகுப்பில் வைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இன்று சென்னையில் கோபாலபுரம் உட்பட 10 அமுதம் நியாய விலை கடைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு  உள்ளது.

முதற்கட்டமாக தொடங்கிய விற்பனை

இது தொடர்பாக அமைச்சர் சக்கரபாணி கூறுகையில், தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் மூலமாக இந்த 15 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு விற்பனை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கோபாலபுரம், அண்ணா நகர் பகுதியில் உள்ள அமுதம் அங்காடி,உள்ளிட்ட 10 அமுதம் நியாயவிலைக் கடைகளில் முதற்கட்டமாக இந்த விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இதனை தமிழகம் முழுவதும் விரைவில் விரிவாக்கம் செய்யப்படும்.

100 புதிய அமுதம் அங்காடிகள்

600 ரூபாய்க்கு மேல் உள்ள மளிகைத் தொகுப்புகளை 499 ரூ.க்கு விற்கிறோம். தமிழகத்தில் 100 அமுதம் அங்காடிகள் புதிதாக தொடங்கப்பட உள்ளன. அமுதம் அங்காடிகளுக்கான இடத் தேர்வு குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆட்சியர்களின் கருத்துகளை பெற்று புதிதாக 100 இடங்களில் அமுதம் அங்காடிகள் உருவாக்கப்படும் என தெரிவித்தார். 

Latest Videos

click me!