இங்கெல்லாம் டிரெக்கிங் செல்லலாம்.! 40 ஸ்பாட்களை வெளியிட்ட தமிழக அரசு- அனுமதி பெறுவது எப்படி.?

First Published | Oct 24, 2024, 3:47 PM IST

தமிழக வனத்துறை இளைஞர்களை கவரும் வகையில் 40 மலையேற்றப் பாதைகளை திறந்து வைத்துள்ளது. 14 மாவட்டங்களில் அமைந்துள்ள இந்தப் பாதைகள், பயிற்சி பெற்ற வழிகாட்டிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டுள்ளன. முன்பதிவு மற்றும் வெளிப்படைத்தன்மைக்காக பிரத்யேக வலைதளமும் தொடங்கப்பட்டுள்ளது.

காடுகளுக்குள் சுற்றுலா செல்வது இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். அந்த வகையில் மலையேற்றம் என்றால் கேட்கவா வேண்டும் நண்பர்களின் படையோடு புறப்பட தயாராகிவிடுவார்கள். அந்த வகையில் தமிழகத்தில் மலையேற்றம் செய்ய கடும் கட்டுப்பாடுகள் உள்ள நிலையில்  தமிழக வனத்துறை தற்போது புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் இயற்கை ஆர்வலர்களை மகிழ்விக்கும் விதமாக,

தமிழ்நாடு அரசு 40 தேர்ந்தெடுக்கப்பட்ட மலையேற்ற பாதைகளை பொது மக்களுக்காக திறந்து வைத்துள்ளது. சுற்றுலாவில் நாட்டின் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு நீலகிரி, கொடைக்கானல் மற்றும் கன்னியாகுமரி போன்ற பிரபலமான சுற்றுலா தலங்களை உள்ளடக்கி தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் உள்ள மலையேற்றப்பாதைகள், தமிழ்நாடு வனத்துறையால் தமிழ்நாடு வன மற்றும் உயிரின (மலையேற்ற ஒழுங்குமுறை) விதிகள் 2018-ன் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
 

மலையேற்ற வழிகாட்டிகளாக காடுகள் குறித்த பாரம்பரிய அறிவைக் கொண்ட, 50-க்கும் மேற்பட்ட பழங்குடியின மற்றும் வனங்களை ஒட்டியுள்ள கிராமங்களிலிருந்து 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டு, மலையேற்ற வழிகாட்டிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மலையேற்ற வழிகாட்டிகளுக்கு அவசர நிலைகளைக் கையாளுவதற்கான பாதுகாப்பு நெறிமுறை பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட வழிகாட்டிகளுக்கு சீருடைகள், மலையேற்றக் காலணிகள். முதுகுப்பை, தொப்பி, அடிப்படை முதலுதவிப் பெட்டி, தண்ணீர் குடுவை, வெந்நீர் குடுவை. மலையேற்றக் கோல், தகவல் தொடர்பு சாதனங்கள், விசில் மற்றும் திசைக்காட்டி வழங்கப்பட்டுள்ளன. ஆகியவை அடங்கிய மலையேற்ற உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
 

Tap to resize

மேலும், இத்திட்டத்தின் கீழ் மலையேற்றம் மேற்கொள்ளும் அனைத்து பங்கேற்பாளர்கள் மற்றும் வழிகாட்டிகளுக்குக்கும் காப்பீடு வழங்கப்படுகிறது. பொது மக்களுக்கு முன்பதிவு மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிபடுத்தும் வகையில், தொடங்கப்பட்டுள்ள (www.trektamilnadu.com) பிரத்யேக முன்பதிவு வலைதளத்தின் மூலம் மலையேற்றம் மேற்கொள்ளலாம்.  மேலும், இவ்வலைதளத்தின் மூலம் மலையேற்றம் மேற்கொள்பவர்கள் 100% இணையவழி பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு மலையேற்றத்திற்கான நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ள இயலும்.

18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் மலையேற்றத்திற்கான முன்பதிவு மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். 18 வயதிற்குட்பட்டவர்கள் பெற்றோர் மற்றும் பாதுகாவலரின் ஒப்புதல் கடிதத்துடன் மலையேற்றம் மேற்கொள்ளலாம். 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் (எளிதான மலையேற்ற பாதைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர்) பெற்றோர் அல்லது பாதுகாவலரின் துணையோடு மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

40 மலையேற்றப் பாதைகள்

நீலகிரி மாவட்டம்:- கய்ர்ன் ஹில் (எளிது). லாங்வுட் ஷோலா (எளிது). கரிகையூர் முதல் போரிவரை ராக் பெயிண்டிங் (மிதமானது), கரிகையூர் முதல் ரங்கசாமி சிகரம் (கடினம்), பார்சன்ஸ் வேலி முதல் முக்குர்த்தி குடில் (கடினம்). அவலாஞ்சி கோலாரிபெட்டா (கடினம்), அவலாஞ்சி (காலிஃபிளவர் ஷோலா) தேவார்பெட்டா (கடினம்), அவலாஞ்சி (காலிஃபிளவர் ஷோலா) கோலாரிபெட்டா (மிதமானது). ஜீன் பூல் (எளிது), நீடில் ராக் (கடினம்).

கோயம்புத்தூர் மாவட்டம்:- மாணம்போலி (எளிது), டாப் ஸ்லிப் - பண்டாரவரை (கடினம்), ஆலியார் கனால் பேங்க் (மிதமானது). சாடிவயல் - சிறுவாணி (மிதமானது). செம்புக்கரை பெருமாள்முடி (கடினம்), வெள்ளியங்கிரி மலை (கடினம்), பரலியார் (எளிது).

திருப்பூர் மாவட்டம்:- சின்னார் சோதனைச்சாவடி கோட்டாறு (எளிது), காலிகேசம் பாலமோர் (மிதமானது).

கன்னியாகுமரி மாவட்டம்:- இஞ்ஜிக்கடவு (மிதமானது).

திருநெல்வேலி மாவட்டம்:- காரையார் மூலக்கசம் (மிதமானது), கல்லாறு கொரக்கநாதர் கோவில் (கடினம்).

தென்காசி மாவட்டம்:- குற்றாலம் செண்பகதேவி நீர்வீழ்ச்சி (எளிது). தீர்த்தப்பாறை (எளிது).

தேனி மாவட்டம்:- சின்ன சுருளி - தென்பழனி (மிதமானது). காரப்பாறை (எளிது). குரங்கனி சாம்பலாறு (மிதமானது).

விருதுநகர் மாவட்டம்:- செண்பகத்தோப்பு - புதுப்பட்டி (மிதமானது).

மதுரை மாவட்டம்:- தாடகை மலையேற்றப்பாதை (கடினம்). குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி (கடினம்)

திண்டுக்கல் மாவட்டம்:- வட்டகானல் வெள்ளகவி (கடினம்) சோலார் ஆப்சர்வேட்டரி - குண்டாறு (0-பாயிண்ட்) (மிதமானது). O-பாயிண்ட் கருங்களம் நீர்வீழ்ச்சி (எளிது).

கிருஷ்ணகிரி மாவட்டம்:- குத்திராயன் சிகரம் (கடினம்). ஐயூர் சாமி எரி (எளிது).

சேலம் மாவட்டம்:- குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா குண்டூர் (மிதமானது). கொண்டப்ப நாயக்கன்பட்டி குண்டூர் (கடினம்). நகலூர் - சன்னியாசிமலை (எளிது).

திருப்பத்தூர் மாவட்டம்:- ஏலகிரி சுவாமிமலை (எளிது). ஜலகம்பாறை (மிதமானது).

திருவள்ளூர் மாவட்டம்:- குடியம் குகைகள் (எளிது).
 

Latest Videos

click me!