அரசு பேருந்தில் பயணிப்பவர்களுக்கு பைக், டிவி, ஃபிரிட்ஜ் பரிசு! போக்குவரத்து துறை சூப்பர் அறிவிப்பு!

First Published | Nov 12, 2024, 8:26 PM IST

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு இரு சக்கர வாகனம், எல்இடி டிவி, ஃபிரிட்ஜ் போன்ற பரிசுகளை அறிவித்துள்ளது. இந்த சலுகை வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் பயணம் செய்பவர்களுக்குப் பொருந்தும்.

தமிழ்நாட்டின் அரசுப் போக்குவரத்து கழகங்கள் எட்டு கோட்டங்களின் 26 மண்டலங்கள் மூலம், 317 பணிமனைகளில் இருந்து 10,129 வழித்தடங்களில் 20,232 பேருந்துகளை இயக்கி பொதுமக்களுக்கு சேவை செய்து வருகின்றன. இதில், சாதாரண பேருந்து, சொகுசு பேருந்து, குளிர்சாதன வசதி மற்றும் கழிவறை உள்ளிட்ட பல்வேறு சொகுசு வசதிகளைக் கொண்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளில் முன்பதிவு செய்வோருக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

அதன்படி வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து இதர நாட்களில் முன்பதிவு செய்து பயணிகள் எளிதாக பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் பொருட்டு ஒவ்வொரு மாதத்திலும் சாதாரண நாட்களில் பயணிப்பதற்காக முன்பதிவு செய்யும் பயணிகளில் 3 பயணிகள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு  தலா ரூ.10,000 வழங்கப்பட்டு வருகிறது.  இதனால், முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் முன்பதிவு திட்டத்தை மேலும் ஊக்குவிக்கும் விதமாக இருசக்கர வாகனம், எல்இடி டிவி, ஃபிரிட்ஜ் ஆகியவை பரிசு பொருட்கள் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Tap to resize

இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பயணச்சீட்டுகளை எளிதாக முன்பதிவு செய்யும் வகையில், ஆன்லைன் மூலம் பயணச்சீட்டு முன்பதிவு முறை (OTRS) உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பயணிகள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் உட்பட ஏழு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மூலம் பயணம் செய்து பயன் பெறுகின்றனர். இந்த செயல் முறையானது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் இணையதளம். https://www.tnstc.in. மற்றும் TNSTC Mobile App மூலம்கிடைக்கிறது. பயணிகள் 60 நாட்கள் முன்னரே முன்பதிவு செய்து கொள்ளலாம். தற்போது. தினசரி சுமார் 20,000 பயணச்சீட்டுகள் பயணிகளால் முன்பதிவு செய்யப்படுகின்றன.

முன்பதிவை ஊக்கு விப்பதற்காக ஊக்கத் தொகைத் திட்டம். 2024 ஜனவரி முதல், வார இறுதி நாட்கள். திருவிழாக்கள் மற்றும் சிறப்பு நாட்கள் தவிர்த்து இதர நாட்களில் பயணிக்க முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மாதாந்திர "குலுக்கல் முறை" மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஜனவரி 2024 முதல் மே 2024 வரை, ஒவ்வொரு மாதமும் மூன்று வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் ரூ.10.000 வழங்கப்பட்டது. ஜூன் 2024 முதல். ஒவ்வொரு மாதமும் 13 வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு தலா ரூ.10,000-மும். மீதமுள்ள பத்து வெற்றியாளர்களுக்கு ரூ.2,000-மும் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 30 நபர்கள் தலா ரூ.10000-மும், 50- நபர்கள் தலா ரூ.2000 மும் பெற்று பயனடைந்துள்ளனர்.

பயணிகளிடமிருந்து கிடைத்த கருத்துக்களின் அடிப்படையில், OTRS பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் அனைத்து பயணிகளும் குலுக்கல் முறையில் பங்கேற்று பரிசுகள் வெல்ல வாய்ப்பு வழங்கப்படும் வகையில், வழக்கமான மாதாந்திர குலுக்கல் முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டும் மற்றும் ஒரு சிறப்பு குலுக்கல் முறையும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

1. வழக்கமான மாதாந்திர குலுக்கல் முறை

2024 நவம்பர் மாதம் முதல், வாரத்தின் அனைத்து நாட்களிலும் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் அனைத்து பயணச்சீட்டுகளும் மாதாந்திர குலுக்கல் முறைக்கு தகுதி பெறும். ஒவ்வொரு மாதமும் 13 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு தலா ரூ.10,000 வழங்கப்படும். மற்ற பத்து வெற்றியாளர்களுக்கு தலா ரூ.2,000  வழங்கப்படும். 
 

2. சிறப்பு குலுக்கல் முறை: 

OTRS-இன் கீழ் முன்பதிவை ஊக்குவிக்கும் வகையில், முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மூன்று அற்புதமான உயர் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படும். இது 2024 நவம்பர் 21 முதல் 2025 ஜனவரி 20 வரை வாரத்தின் அனைத்து நாட்களிலும் பயணம் செய்யப்படும் அனைத்து முன்பதிவுகளும் இச் சிறப்பு குலுக்கல் முறைக்கு தகுதி பெறும். பரிசுகள் "சிறப்பு குறுக்கல்" பொங்கல்-2025 பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டு பின்வருமாறு சிறப்பு உயர் பரிசுகள் வழங்கப்படும்.
 

பரிசு பொருட்கள்

முதல் பரிசு - இரண்டு சக்கர வாகனம்

இரண்டாவது பரிசு - LED ஸ்மார்ட் தொலைக்காட்சிப் பெட்டி

மூன்றாவது பரிசு - குளிர்சாதனப் பெட்டி

பொதுமக்கள், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் மூலம் பயணம் செய்ய முன்பதிவு செய்து, கடைசி நேர சிரமங்களை தவிர்த்து எளிதாக பயணம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Latest Videos

click me!