
Supreme Court refuses to cancel Senthil Balaji's bail: தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பல மாதங்கள் சிறையில் இருந்த அவருக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பேற்றார்.
செந்தில் பாலாஜி வழக்கு
ஜாமீன் பெற்ற உடன் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதை எதிர்த்தும், ஜாமீனை ரத்து செய்ய வேண்டியும் சென்னையைச் சேர்ந்த வித்யா குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அமலாக்கத்துறையின் சார்பில் அவர் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி வகிப்பதால் சாட்சியங்களை கலைக்க அதிக வாய்ப்புள்ளது. ஆகவே அவர் அமைச்சராக பொறுப்பேற்க தடை செய்ய வேண்டும். அவர் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று அமலாகக்த்துறை வாதிட்டது.
உச்சநீதிமன்றம் விதித்த கெடு
இதை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் ஜாமீன் வேண்டுமா? இல்லை அமைச்சர் பதவி வேண்டுமா? என்பது குறித்து வரும் 28ம் தேதிக்குள் (அதாவது இன்று) தெரிவிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்புக்கு கெடு விதித்தது. இதனால் வேறு வழியில்லாததால் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று (28ம் தேதி) விசாரணைக்கு வந்தது.
தமிழ்நாட்டையே அதிர வைத்த ஆணவக்கொலை! குற்றவாளிகளின் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்
ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்
அப்போது செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலகியது குறித்து உச்சநீதிமன்றத்துக்கு முறைப்படி தெரிவித்தனர். அப்போது அமலாக்கத்துறை சார்பில், ''வழக்கு முடியும் வரை செந்தில் பாலாஜி எந்த ஒரு பதவியும் வகிக்க கூடாது என்று உத்தரவிட வேண்டும். அவர் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டது. அதற்கு செந்தில் பாலாஜி தரப்பில், ''உச்சநீதிமன்றம் உத்தரவின்படி செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த வழக்கு முடிய 15 ஆண்டுகள் ஆகலாம். அதற்காக, அவர் எந்த பதவியும் வகிக்க முடியாது என உத்தரவிட முடியாது'' என்று வாதிடப்பட்டது.
புதிய கட்டுப்பாடுகள் தேவையில்லை
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், ''செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இல்லை. ஆகையால் புதிய கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கத் தேவையில்லை. செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆனால் உச்சநீதிமன்றத்தை நாடலாம். ஆகவே செந்தில் பாலாஜி ஜாமினுக்கு எதிரான வழக்கை முடித்து வைக்கிறோம்'' என்று கூறி இந்த வழக்கை முடித்து வைத்தனர்.
மீண்டும் அழுத்தம் திருத்தமாக சொன்ன நீதிபதிகள்
முன்னதாக நீதிபதிகள், ''செந்தில் பாலாஜிக்கு எதிரான பிரதான வழக்கில் அவர் ஜாமீன் கோரியபோது, தான் எந்த அதிகாரத்திலும் இல்லை, எந்த பதவியிலும் இல்லை என்று கூறினார்; அதன் அடிப்படையிலேயே அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது என்பதை மீண்டும் நீதிமன்றம் உறுதிப்படுத்துகிறது'' என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
செந்தில் பாலாஜி, பொன்முடி ராஜினாமா ஏற்பு –புதிய அமைச்சர் யார்? நாளை மாலை பதவியேற்பு!