வாட்டி வதைத்த கோடை வெயில்; சென்னையை குளிர்வித்த திடீர் மழை, குஷியில் பொதுமக்கள்!
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கோடை வெயில்
தமிழகத்தில் தலைநகர் சென்னை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர்.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
இந்நிலையில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை
இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க: தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்! மழைக்கு நாள் குறித்த வானிலை மையம்! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
அடுத்த 3 மணிநேரத்தில் 9 மாவட்டங்களில் மழை
இதனிடையே அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஈரோடு, சேலம், தருமபுரி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது.
சென்னையில் மழை
அதன்படி தலைநகர் சென்னையில் கிண்டி, அசோக் நகர், நந்தனம், தேனாம்பேட்டை, தி.நகர், அடையாறு, மந்தைவெளி, பட்டினபாக்கம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. ஆவடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. ஆவடியில் மழையுடன் சூறைக்காற்றும் வீசியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். சென்னையில் சூறைக்காற்று வீசுவதால் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது.