மண்ணிலும், பொன்னிலும் முதலீடு செய்தால் என்றைக்கும் வீணாகாது என்பார்கள். அதற்கு ஏற்றார் போல தங்கம் விலையும், காலி மனைகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் இரண்டிலும் பொதுமக்கள் அதிகளவில் முதலீடு செய்து வாங்கி குவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழக மக்கள் அதிகளவிலேயே இதை இரண்டையும் ஆர்வத்துடன் வாங்குகின்றனர். இதன் காரணமாகவே தங்கம் மற்றும் காலி மனையின் மீதான விலையும் நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் இடம் மற்றும் காலி மனைகளை வாங்கும் போது நல்ல நாட்கள் சுபமுகூர்த்த நாளா என்று பார்த்து வாங்குவது வழக்கம். அதற்காக பொதுமக்கள் தாங்கள் விரும்பும் நாளில், விரும்பும் நேரத்தில் பதிவு மேற்கொள்ளும் வகையில் டோக்கன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்துக்கும் தினமும் 100 டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகத்துக்கு 200 டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தை பொறுத்தமட்டில் சுபமுகூர்த்த தினங்களில் அதிகளவில் பத்திரப்பதிவு என்பது நடக்கும். அதன்படி ஒவ்வொரு சுபமுகூர்த்த தினகங்களிலும் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கப்படுகின்றன. இந்நிலையில் ஐப்பசி மாதத்தின் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பத்திரப்பதிவுத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்வது வழக்கம்.
தற்போது ஐப்பசி மாதத்தின் சுபமுகூர்த்த தினங்களான நவம்பர் 07 மற்றும் 08 ஆகிய நாட்களில் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
இதனை ஏற்று ஐப்பசி மாதத்தின் சுபமுகூர்த்த தினங்களான 07 மற்றும் 08 ஆகிய நாட்களில் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.