மகளிர்களுக்கான தமிழக அரசின் திட்டம்
தமிழக அரசு சார்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மகளிர்களுக்கு உதவிடும் வகையில் மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிப்பது, அவர்கள் சுயமரியாதையை காப்பது ஆகியவற்றுக்காகவே இந்த திட்டம் தமிழக முதலமைச்சரால் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் தற்போது வரை ஒரு கோடியே 16 லட்சம் பேர் பயனடைந்து வருகிறோம்.
இந்த திட்டத்தை விரிவுப்படுத்தவும் தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. இதே போன்று அரசு பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவ, மாணவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையானது வழங்கப்பட்டு வருகிறது. தமிழ் புதல்வன், புதுமைப்பெண் என பெயிரிடப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
கறவை மாடுகள் வளர்க்க ரூ 1.20 லட்சம்
மேலும் விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ஆடு, மாடு, கோழி வளர்ப்பிற்கு மானிய விலையில் கடனுதவி தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம், இரண்டு கறவை மாடுகள் வாங்க 1.20 லட்சம் ரூபாய் கடனுதவி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கவும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் கடன் உதவிக்கு ஆண்டு வட்டியை பொறுத்த வரைக்கும் 7 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பயனாளிகளின் பங்கு 5% எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் மகளிர் முன்னேற்றத்திற்காக 50ஆயிரம் மானியம் வழங்குவதற்கான திட்டத்தையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
சுய தொழில் தொடங்க 50ஆயிரம் உதவித்தொகை
இதன் படி, கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்களுக்கு ரூ.50,000 மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழக அரசின் ரூ. 50,000/- மானியம் வழங்கும் திட்டத்திற்கு ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் விண்ணப்பித்து பயனடையும்மாறு கேட்டுக்கொண்டுள்ளார். 200 பயனாளிகளுக்கு சுய தொழில் செய்வதற்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் சுய தொழில் செய்து சுயமரியாதையுடன் வாழ்வதற்கு 1 கோடி ரூபாய் மானியம் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைம்பெண்கள் நலவாரியத்தில் உறுப்பினர் ஆவதற்கு www.tnwidowwelfareboard.in.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து உறுப்பினர் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் நடமாடும் உணவகங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், சிற்றுண்டி கடைகள், நடமாடும் பழச்சாறு கடைகள், சலவைகடைகள் போன்ற சுய தொழில் செய்ய உதவி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை
இதே போல மற்றொரு திட்டம் தான் மாதம் 6ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டமாகும். விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்தநிலையில் விளையாட்டுத்துறையில் சர்வதேச / தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள முன்னாள் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6000/- வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதள முகவரி www.sdat.tn.gov.inமூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தகுதிகள்
சர்வதேச / தேசிய போட்டிகளில் முதலிடம் ,இரண்டாமிடம், மூன்றாம் இடங்களில் வெற்றிபெற்றிருத்தல் வேண்டும்.
சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளங்களால் நடத்தப்பட்ட சர்வதேச போட்டிகள், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள். அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி 58வயதை பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்
விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6000/-ஆக இருத்தல் வேண்டும்.
ஓய்வூதியம் பெற்றிய இணையதளத்தில் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.