Naam Tamilar Katchi Protest : இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் சம்பவத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் ராமநாதபுரத்தில் போராட்டம் நடந்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய சீமான், மீனவர் வாழ்க்கையின் மீது துளியும் மதிப்பளிக்காத அரசுகள் தான் இங்க தொடர்ந்து வருகிறது.
ஓட்டுக்காக மட்டுமே கவலைப்படும் இந்த ஆட்சியாளர்கள், மீனவர்களின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படுவதில்லை என விமர்சித்தார். உலகின் நான்காவது மிகப்பெரிய ராணுவ வலிமையைக் கொண்டுள்ள இந்தியா, இலங்கை கடற்படை தாக்க வரும்போது தடுத்து, இதுவரை ஒரே ஒரு தமிழ் மீனவரை கூடக் காப்பாற்றாதது ஏன்.? எனவும் கேள்வி எழுப்பினார்.
தமிழக மீனவர்கள் கைது
உலகில் எந்த நாட்டு இராணுவமும் தம் சொந்த நாட்டு மீனவரை இப்படி சுட்டுக்கொல்வதை வேடிக்கை பார்க்குமா..? இலங்கை கடற்படையிடமிருந்து நாட்டுக் குடிகளைக் காப்பாற்றத் திறனற்ற இந்தியாவிற்கு எதற்குக் கடற்படை.? என ஆவேசமாக பேசினார். இதுவே குஜராத் மீனவரை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக்கொன்றால் கொதித்தெழுந்து கொலை வழக்குப் பதிந்து, போர் முழக்கமிட்டு ஐ.நா.மன்றம் வரை அபாய மணியடிக்கும். ஆனால் தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டால் எந்தச் சலனமுமின்றி அமைதியாகக் கடந்து செல்வது ஏன் என கேள்வி எழுப்பினார்.
கடற்கரையில் கல்லறை எதற்கு.?
எனக்கு ஒரு முறை அதிகாரம் கொடுத்து பாருங்கள். நான் பதவியில் இருக்கும் போது என் மீனவனை தொட்டு விட்டால், நான் பதவியை விட்டு விலகிடுறேன் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இந்த நாட்டை ஆண்ட பிரதமர் யாராவது கடற்கரையில் கல்லறை கட்டிப்பட்டுள்ளதா.? எத்தனையோ முதலமைச்சர்கள் இந்த நாட்டில் இருந்திருக்கிறார்கள்.
அதில் யாராவது இறந்த பிறகு கடற்கரையில் கல்லறை அமைத்து இருக்கிறார்களா. .? ஆனால் தமிழகத்தில் நீங்கள் என்ன செய்து விட்டீர்கள் என்று ஆளாளுக்கு இரண்டு இரண்டு ஏக்கரில் சமாதி கட்டி படித்திருக்கிறீர்கள் என கடுமையாக விமர்சித்தார்.
சுடுகாட்டை அகற்றுவேன்
எங்களை எல்லாம் சுடுகாட்டில் போட்டுவிட்டு நாட்டையே சுடுகாடாய் ஆக்கிவிட்டு நீங்கள் கடற்கரையில் குதூகலமாக படுத்து இருக்கிறீர்கள். இதனை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால் நான் கேட்பேன். நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் அதிகாரத்திற்கு வரும் போது மெரினா கடற்கரை சுடுகாடு சுத்தப்படுத்தப்படும் என சீமான் தெரிவித்தார்.