தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1 முதல் அடிப்படை ஊதியத்தில் 6% உயர்வு, திருமணக் கடன் மற்றும் பண்டிகை முன்பணம் உயர்வு போன்ற பலன்கள் அடங்கும்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் கடந்த பல ஆண்டுகளாக ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அவ்வப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு அனைத்துப் போக்குவரத்து கழகப் பணியாளர்களுக்கான 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையானது போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் தொழிலாளர் தனி இணை ஆணையர் ரமேஷ் முன்னிலையில் நேற்று குரோம்பேட்டை, மாநகர் போக்குவரத்து கழகப் பயிற்சி மைய வளாகத்தில் இறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்பு வௌியாகியுள்ளது.
25
ஊதிய உயர்வு
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஒரு இலட்சத்து 9 ஆயிரத்து எழுநூற்று என்பத்து ஏழு பணியாளர்கள் 15-வது 12(3) ஊதிய ஒப்பந்தத்தின் கீழ் பலனடைவார்கள். இதில் 48,006 ஓட்டுநர்களும், 42,825 நடத்துநர்களும், 13,003 தொழில்நுட்பப் பணியாளர்களும் மற்றும் 2.529 இதரப் பிரிவு பணியாளர்களும் பணியாளர்களும் பலனடைவார்கள். அதாவது 2023 செப்டம்பர் 1ம் தேதி முதல் அடிப்படை ஊதியத்தில் 6 சதவீதம் உயர்த்தி ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டு, நிலுவைத் தொகை 2024 செப்டம்பர் 01 முதல் 4 காலாண்டு தவணையாக வழங்கப்படும். இந்த ஊதிய உயர்வினால் குறைந்தபட்சம் ரூ.1,420 முதல் அதிகபட்சம் ரூ.6,460 வரை பணப்பலன்கள் கிடைக்கும். சலவைப்படி ரூ.140லிருந்து ரூ.160ஆகவும், தனி பேட்டா ரூ.16லிருந்து ரூ.21ஆகவும், ரிஸ்க் அலவன்ஸ் ரூ.9லிருந்து ரூ.14ஆகவும், ஸ்டியரிங் அலவன்ஸ் ரூ.8லிருந்து ரூ.13ஆகவும், இரவுப் பணிப்படி ரூ.35லிருந்து ரூ.40ஆகவும், ஷிப்ட் அலவன்ஸ் ரூ.9லிருந்து ரூ.14ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
35
திருமண கடன்
திருமண கடன் ரூ.50,000லிருந்து ரூ.1,00,000ஆக உயர்த்தி வழங்கப்படும். பண்டிகை முன்பணம் ரூ.10,000 லிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். தொழிலாளர்கள் பணியில் உள்ள போது அவர்களது பிள்ளைகளுக்கு வெளியிடங்களில் மேற்கல்வி பயில இலவச பேருந்து பயண சலுகை (Free Bus Pass) நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வெளியிடங்களில் மேற்கல்வி பயின்று வரும் வேளையில் தொழிலாளர் ஓய்வு பெற்றால் / இறந்தால், ஓய்வு பெற்ற /இறந்த ஆண்டுடன் இலவச பேருந்து பயண சலுகையை உடனடியாக நிறுத்தம் செய்யாமல் கல்வி காலம் (Course Period) முடியும் வரை தொடர்ந்து வழங்கப்படும்.
தொழிலாளர்கள் அவர்தம் குடும்பத்துடன் குடும்ப இலவச பயணச் சலுகையை பயன்படுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக இருக்கை வசதி, இருக்கை மற்றும் படுக்கை வசதி. படுக்கை வசதி மற்றும் குளிர்சாதனப் பேருந்துகளில் பயணம் செய்யும் போது அதற்குரிய வித்தியாசப் பயணக் கட்டணத்தை செலுத்தி பயணம் செய்ய அனுமதிக்கப்படும். தவிர்க்க முடியாத காரணங்களால் பயணம் மேற்கொள்ள இயலாத நிலையில் அந்த கிலோ மீட்டர் மீண்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
55
ஊக்கத்தொகை
ஊக்கத்தொகை (இன்சென்டிவ்) அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் ஒரே முறையில் கணக்கீடு செய்து தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக பணியாளர்களுக்கு வழங்குவது தொடர்பாக குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும். குறைந்தபட்சத் தொகையாக நாளொன்றுக்கு ரூ.6 லிருந்து ரூ.20ஆக உயர்த்தி வழங்கப்படும். தொழிலாளர்கள் அவர்களது பணிக்காலத்தில் வழங்கப்பட்ட தண்டனை குறித்த மேல்முறையீடு 90 நாட்களுக்குள் செய்யப்பட வேண்டும் என்பதை ஒரு முறை தளர்த்தி 30.06.2025 க்குள் மேல்முறையீடு செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப பரிசீலித்து, ஆணைகள் வழங்கப்படும் நாளிலிருந்து உரிய பலன்கள் வழங்கப்படும். இந்த ஒப்பந்தத்தால் நடைமுறைப்படுத்துவதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு நிலுவைத் தொகைக்கு ரூ.319.50 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் எனவும், மாதம் ஒன்றுக்கு ரூ.40.26 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.