
சாம்பார், ரசம், குழம்பு எது இருந்தாலும் சோறு இல்லாமல் தமிழ்நாட்டு சாப்பாடு முழுமையடையாது. ஆனால், இப்போது அந்த சோற்றுக்கே செலவு எகிறுகிறது. கடந்த சில மாதங்களாக அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வருவது குடும்பங்களின் மாத பட்ஜெட்டில் நேரடியாக கை வைத்துள்ளது. குறிப்பாக பொன்னி உள்ளிட்ட அன்றாட பயன்பாட்டு அரிசி வகைகளின் விலை கணிசமாக அதிகரித்திருக்கிறது.
மழைப் பற்றாக்குறை, நெல் சாகுபடி மற்றும் விளைச்சல் குறையும் அபாயம், பிற மாநிலங்களில் இருந்து வரும் வரத்து, ஏற்றுமதி தேவை என பல காரணிகள் இந்த விலையேற்றத்தின் பின்னணியில் உள்ளது. அப்படியானால் அரிசி விலை இன்னும் உயருமா? புதிய நெல் அறுவடை வந்ததும் விலை குறையுமா? விவசாயிகளுக்கு இந்த விலையேற்றம் உண்மையிலேயே பலன் தருகிறதா? என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக சில அரிசி வகைகளின் விலை 25 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உதாரணமாக, மொத்த விற்பனைச் சந்தையில் 26 கிலோ பொன்னி அரிசி மூட்டை நான்கு மாதங்களுக்கு முன்பு சுமார் ரூ.1,400-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது அதன் விலை ரூ.1,800 வரை உயர்ந்துள்ளது. இதன்படி பார்த்தால், வெறும் நான்கு மாதங்களில் ஒரு மூட்டைக்கு சுமார் ரூ.400 வரை கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.
தற்போதைய விலையை கணக்கிட்டால், ஒரு கிலோ பொன்னி அரிசியின் விலை ரூ.69 ஆகிறது. அன்றாட உணவில் அரிசி முக்கிய இடம் வகிக்கும் நிலையில், இந்த விலை உயர்வு குடும்பங்களின் மாதாந்திர மளிகைச் செலவிலும் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய நுகர்வோர் விவகாரத் துறையின் தரவுகளின்படி, இந்தியாவில் 100 கிலோ அரிசியின் சராசரி மொத்த விலை தற்போது ரூ.4,169 ஆக உள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு இதே 100 கிலோ அரிசியின் சராசரி மொத்த விலை ரூ.4,103 ஆக இருந்தது. ஆறு மாதங்களுக்கு முன்பு இது ரூ.3,765 மட்டுமே இருந்தது. இதன்படி பார்த்தால், ஆறு மாதங்களில் 100 கிலோ அரிசியின் சராசரி மொத்த விலை சுமார் ரூ.403 அதிகரித்துள்ளது.
அரிசி விலை உயர்வுக்கு பருவமழை பற்றாக்குறை மற்றும் நெல் உற்பத்தி குறைவு போன்றவை முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. போதிய மழையின்மை, நெல் சாகுபடிப் பரப்பு குறைவு மற்றும் நீர்த்தேக்கங்களில் தண்ணீர் அழுத்தம் காரணமாக இந்த ஆண்டில் இந்தியாவின் அரிசி உற்பத்தி குறையக்கூடும் என்று சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அரிசி விலை உயர்வுக்கு உள்நாட்டு காரணங்கள் மட்டுமல்ல, சர்வதேச சந்தைத் தேவையும் ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது. அண்மைய புவிசார் பதற்றங்களால் பல நாடுகள் தங்களது உணவு தானிய கையிருப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன. இதனால் இந்திய அரிசிக்கான வெளிநாட்டுத் தேவை அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்றுமதிக்கான தேவை அதிகரிக்கும்போது, அதன் தாக்கம் உள்நாட்டில் அரிசி கிடைக்கும் அளவு மற்றும் விலையிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.
விவசாயத் தொழிலாளர்களின் கூலி, எந்திர வாடகை, பாசனச் செலவு, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலை உயர்வு காரணமாக நெல் சாகுபடிக்கான மொத்த செலவும் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகளின் உற்பத்திச் செலவு உயர்ந்து, அதன் தாக்கம் நெல்லின் கொள்முதல் விலை மற்றும் அரிசியின் சந்தை விலையிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நெல் விளைகிறதே அப்படியிருக்க அரிசி விலை ஏன் இவ்வளவு உயருகிறது? என்ற கேள்வி எழலாம். தமிழகத்தின் மொத்த அரிசித் தேவையையும் மாநிலத்தில் விளையும் நெல் மட்டுமே பூர்த்தி செய்வதில்லை என்பதுதான் இதற்கு முக்கிய காரணம்.
Rice Mill Owners Federation தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி, தமிழகத்திற்கு ஆண்டுக்கு சுமார் 95 லட்சம் டன் அரிசி தேவைப்படுகிறது. இதில் சுமார் 75 முதல் 80 லட்சம் டன் வரை மாநிலத்திலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள தேவைக்கு ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்து வரும் அரிசியை தமிழகம் சார்ந்துள்ளது.
இதனால் அங்கு நெல் உற்பத்தி குறைந்தாலோ, அரிசி வரத்து பாதிக்கப்பட்டாலோ அல்லது கொள்முதல் விலை அதிகரித்தாலோ அதன் தாக்கம் தமிழக சந்தையிலும் விரைவாக எதிரொலிக்க வாய்ப்புள்ளது. இதுவும் தமிழகத்தில் அரிசி விலை உயர்வதற்கான காரணங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
கடையில் அரிசி விலை ஏறிவிட்டதே அப்படியானால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்குமே? என்று நினைக்கலாம். ஆனால் உண்மை அப்படியல்ல. சந்தையில் நாம் வாங்கும் அரிசியின் சில்லறை விலையும், விவசாயிக்கு கிடைக்கும் நெல்லின் விலையும் ஒன்றல்ல.
விவசாயியின் உண்மையான வருமானம் என்பது நெல்லுக்கு கிடைக்கும் விலையை மட்டும் சார்ந்ததல்ல. ஒரு ஏக்கரில் கிடைக்கும் மகசூல், விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து, தொழிலாளர் கூலி, பாசனம், அறுவடை இயந்திர வாடகை உள்ளிட்ட மொத்த சாகுபடிச் செலவையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நெல்லுக்கு நல்ல விலை கிடைத்தாலும் மழை பற்றாக்குறை அல்லது தண்ணீர் பிரச்சினையால் விளைச்சல் குறைந்துவிட்டால் விற்பனை செய்ய விவசாயியிடம் இருக்கும் நெல்லின் அளவும் குறையும். அதே நேரத்தில் சாகுபடிச் செலவும் அதிகரித்திருந்தால், சந்தையில் அரிசி விலை உயர்ந்தாலும் அதன் முழுப் பலனும் விவசாயியின் கைக்கு லாபமாகச் சென்று சேரும் என்று கூற முடியாது.
அரிசி விலை உயர்வின் முதல் தாக்கம் சாமானிய மற்றும் நடுத்தர குடும்பங்களுக்குத்தான். ஒரு குடும்பம் மாதத்திற்கு 20 - 25 கிலோ அரிசி பயன்படுத்தும் நிலையில், கிலோவுக்கு ரூ.10 உயர்ந்தாலே மாதச் செலவு ரூ.200 முதல் ரூ.250 வரை அதிகரிக்கும்.
அதேபோல் ஹோட்டல்கள், மெஸ், கேன்டீன்கள், கேட்டரிங் நிறுவனங்களின் மூலப்பொருள் செலவும் உயரும். இந்தக் கூடுதல் செலவை சமாளிக்க முடியாத சூழலில் உணவுகளின் விலை உயர வாய்ப்புள்ளது.
விலை ஏறியது சரி எப்போது குறையும்? என்பதுதான் தற்போது பலரின் கேள்வி. அக்டோபர் - நவம்பர் மாதங்களில் தொடங்கவுள்ள புதிய நெல் வரத்து (சம்பா பருவம்) சந்தைக்கு வரும் போது அரிசி விலை படிப்படியாகக் குறைய வாய்ப்புள்ளது.
ஆனால் உடனடியாக பழைய விலைக்குத் திரும்பும் என்று கூற முடியாது. புதிய நெல்லின் மகசூல், மழையின் அளவு, அண்டை மாநிலங்களில் இருந்து வரும் அரிசி, ஏற்றுமதித் தேவை மற்றும் அரசின் சந்தை நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பொறுத்தே அடுத்தகட்ட விலை அமையும்.
மொத்தத்தில், தற்போதைய விலை உயர்வுக்கு ஒரே ஒரு காரணம் இல்லை. உற்பத்தி குறித்த அச்சம், வெளிமாநிலங்களைச் சார்ந்திருப்பது மற்றும் சந்தைத் தேவை என பல காரணங்கள் பின்னணியில் உள்ளன. புதிய அறுவடைக்குப் பிறகு விலை அழுத்தம் குறைய வாய்ப்பு உள்ளது. ஆனால் எப்போது பழைய விலைக்குத் திரும்பும் என்பதை இப்போதே உறுதியாகக் கூற முடியாது.