அரசியலில் நான் சில தவறுகளை செய்துவிட்டேன் என்று கூறி வேதனையை வெளிப்படுத்திய பாமக நிறுவனர் ராமதாஸ் அதில் முதன்மையான ஒன்று அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது என தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இடையேயான மோதல் தற்போது கட்சி தொண்டர்கள் இடையேயான மோதலாக மாறி உள்ளது. இதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் பாமக நிர்வாகி ஒருவரின் இல்ல துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் மீது அன்புமணியின் ஆதரவாளர்கள் கொடூரமான தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ராமதாஸ் இன்று தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அரசியலி்ல் நான் சில தவறுகளை செய்துவிட்டேன். அதில் முதல் தவறு அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது. இரண்டாவது தவறு அவரை கட்சியின் தலைவராக்கியது. இதுபோன்ற சில தவறுகளை நான் செய்துவிட்டேன். தற்போது அமைதியான முறையில் பாமக.வை வழிநடத்தி வருகிறேன்.
24
அனைத்து நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனித்து வருகிறேன்
தற்போதைய சூழலில் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது என பொதுமக்களும், பிற கட்சியினரும் நினைக்கின்றனர். அந்த அளவுக்கு அன்புமணியின் பேச்சும், செயல்பாடுகளும் அருவருக்கத்தக்க வகையில் உள்ளன. நடக்கக்கூடிய அனைத்தையும் நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன்.
34
ஐயா என அழைத்தவர்கள் இன்று திட்டுகின்றனர்
அன்புமணியின் செயல்பாடுகளால் ஐயா, ஐயா என்று அன்போடு அழைத்தவர்கள் இன்று என்னை திட்டி பேசுகின்றனர். அந்த கும்பலில் இருக்கும் சிலரைத் தவிர மற்றவர்கள் நான் வளர்த்தப் பிள்ளைகள். நான் வளர்த்தப் பிள்ளைகளை அழைத்து அன்புமணியும், சௌமியாவும் சில பொறுப்புகளைக் கொடுத்துள்ளனர். அதனால் இன்று என் மீதும், ஜிகே மணி மீதும் அவதூறு பரப்பி வருகின்றனர்.
என் தலைமையில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறையோ, மோதலோ நடைபெற்றது கிடையாது. ஆனால் தற்போது கத்தி, வீச்சருவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்துகின்றனர். இதையெல்லாம் பார்க்கவே பயங்கரமாக உள்ளது. இதுபோன்ற விசயங்களைத் தான் அவர் டீசன்ட் மற்றும் டெவலப்மென்ட் அரசியல் என சொல்லி வந்தாரா என தெரியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.