திருநெல்வேலி சீமைக்கும், பழைமை வாய்ந்த பொருநை நாகரிகத்திற்கும் மேலும் புகழ் சேர்க்கும் வகையில், நெல்லையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள 'பொருநை அருங்காட்சியகம்' பொதுமக்களின் பார்வைக்காகத் திறக்கப்படவுள்ளது. சுமார் ரூ.67.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த நவீன அருங்காட்சியகத்தை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சனிக்கிழமை இரவு மின்னொளியில் மிளிர்ந்த விழாவில் திறந்து வைத்தார். மேலும், அருங்காட்சியக வளாகத்தில் வன்னி மரக்கன்றையும் நட்டு வைத்தார்.
எங்கு அமைந்துள்ளது?
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. சுமார் 13 ஏக்கர் பரப்பளவில், 54,296 சதுர அடி விஸ்தீரணத்தில் இது பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, அறிமுக கூடத்தை பார்வையிட்ட அவருக்கு, அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள தொல்பொருள்கள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்தார்.