Armstrong Murder
ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம்
வட சென்னை பகுதியில் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங், இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தார். கடந்த 5ஆம் தேதி பெரம்பூரில் உள்ள தனது புதிய வீட்டருக்கே நின்றுகொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங்கை சுத்துப்போட்ட கும்பல் அரிவாளால் வெட்டி சாய்த்தது.
இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் 11 பேர் சரண் அடைந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக வாக்கு மூலம் கொடுத்தனர்.
Armstrong
என்கவுன்டரில் சுட்டுக்கொலை
இருந்த போதும் இந்த கொலைக்கு பின்னனியில் யார் உள்ளார்கள் என்ற தகவலை தெரிவிக்க மறுத்தனர். அப்போது தான் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய திருவேங்கடத்தை போலீசார் என்கவுன்டரில் சுட்டு கொன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கொலையாளிகள் இந்த கொலைக்கு பின்னனியில் யார் யார் உள்ளார்கள் என தகவலை கூற தொடங்கினர். இதனையடுத்து தான் அதிமுக, திமுக, பாஜக, தமாகா, தேமுதிக என பல கட்சி நிர்வாகிகள் சிக்கினர்.
சென்னை கமிஷனர் எச்சரிக்கை
ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்திற்கு பிறகு சென்னை மாநகர ஆணையராக பொறுப்பேற்ற அருண், நேரடியாகவே ரவுடிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு அவர்கள் மொழியிலேயே பாடம் நடத்தப்படும் என தெரிவித்தார். அப்போது தான் குற்றவாளி திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டார். அடுத்ததாக குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளின் வீடுகளுக்கே சென்று போலீசார் ஆய்வு செய்ய தொடங்கினர்.
Armstrong
குற்றவாளிகளுக்கு செக்
தற்போது அடுத்தாக ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் சிக்கிய 21 பேரின் சொத்துக்களை முடக்க சென்னை கமிஷனர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொலை செய்வதற்கு கூலியாக பல லட்சங்களில் பணம் பெற்றுக்கொண்டு, சிறையில் இருந்து சில மாதங்களுக்கு பிறகு வெளியே வந்துவிடலாம். பிறகு ஜாலியாக இருக்கலாம் என நினைத்த கூலிப்படையினருக்கு செக் வைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.