தமிழகம் வந்த பிரதமர் மோடி மதுரையில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கும் இந்த அரசு நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் எ.வ.வேலு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்
இந்த விழாவில் ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, மரக்காணம்-புதுவை பிரிவு, பரமக்குடி-ராமநாதபுரம் பிரிவு 4 வழிச்சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் மறுசீரமைப்பு செய்த திருவில்லிபுத்தூர், மணப்பாறை உள்ளிட்ட ரயில் நிலையங்களையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும் சென்னை கடற்கரை எழும்பூர் இடையே அமைக்கப்பட்ட 4வது ரயில் பாதையையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அப்பர்ணித்தார்.
தமிழகத்துக்கு 9 மடங்கு அதிக நிதி
பின்பு இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, ''தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்டதை விட 9 மடங்கு அதிகமாக நிதி வழங்கியுள்ளோம். தமிழகத்தில் 1,300 கிமீ தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைத்துள்ளோம். தமிழகத்துக்கு 9 வந்தே பாரத் ரயில் வழங்கப்பட்டுள்ளது. தமிழக உள்கட்டமைப்புக்கு வழங்கப்படும் நிதி 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியா வளர தமிழகத்தின் பங்கு அவசியம்
சென்னை-பெங்களூரு, சென்னை-ஹைதராபாத் இடையே புல்லட் ரயில் சேவை கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாடு வளமான வரலாறு, கலாசாரம் கொண்ட மாநிலம் ஆகும். ஆதிச்சநல்லூர் உலக கலாசார மையமாக மாற்றப்படும். புலிகாட் ஏரி, பொதிகை மலையை சுற்றி சுற்றுச்சூழல் சுற்றுலா ஏற்படுத்தி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். 2047ல் பாரதம் வளர்ந்த நாடாக மாற தமிழ்நாட்டின் பங்களிப்பு மிக முக்கியமாக இருக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.