கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் தோல்வி... தவெக வேட்பாளரிடம் வெற்றியை பறிகொடுத்த சோகம்..!

Published : May 04, 2026, 04:02 PM IST

தமிழக வெற்றிக் கழகத்தின் கொளத்தூர் தொகுதி வேட்பாளர், விஎஸ் பாபு தன்னை எதிர்த்து போட்டியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினை தோற்கடித்து வெற்றி வாகை சூடி இருக்கிறார்.

PREV
14
MK Stalin Defeated by TVK

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி ஆரம்பகட்ட நிலவரப்படி 234 தொகுதிகளில் 108 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. சமீபத்திய வாக்கு எண்ணிக்கை நிலவரங்களின்படி, தவெக 108 தொகுதிகளில் முன்னிலை பெற்று, மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆட்சி அமைக்கத் தேவையான எண்ணிக்கையை விட 10 இடங்கள் குறைவாக இருந்தாலும், திமுக அல்லது அதிமுக கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளின் ஆதரவுடன் இந்த எண்ணிக்கையை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

24
வெற்றிக் களிப்பில் தவெக

தவெகவின் இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகம் முன்பு தொண்டர்கள் கூடி, கொடிகளை அசைத்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். விஜய்யின் வீட்டைச் சுற்றிப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, மூத்த காவல்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தக் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் நடிகை த்ரிஷா கிருஷ்ணனும் விஜய்யின் வீட்டிற்கு வருகை தந்தார்.

34
தோற்றுப்போன ஸ்டாலின்

இது ஒருபுறம் இருக்க தவெக-விடம் வீழ்ந்த நட்சத்திர வேட்பாளர்கள் சிலரும் உள்ளனர். அதில் தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஒருவர். சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அவரை தவெக வேட்பாளர் விஎஸ் பாபு வீழ்த்தி வெற்றிவாகை சூடி உள்ளார். இன்னும் ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கை இருந்தாலும் அடுத்த சுற்று எண்ணப்பட இருக்கும் வாக்குகளைக் காட்டிலும் அதிகளவு முன்னிலை பெற்றுள்ளதால் வி.எஸ்.பாபுவின் வெற்றி உறுதியாகி உள்ளது.

44
வாரிசு அரசியலின் முடிவு

தவெக கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு இந்த வெற்றி குறித்துப் பேசுகையில், "எங்களுக்கு எந்தக் கூட்டணியும் தேவையில்லை என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். நாங்கள் தனியாகவே ஆட்சி அமைப்போம் என்று உறுதியாகச் சொல்ல முடியும். இதில் எந்த சந்தேகமும் இல்லை; இது மிகவும் தெளிவான மக்கள் தீர்ப்பு. மக்கள் கொள்ளை, ஊழல், மற்றும் குடும்ப அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். இது வாரிசு அரசியலின் முடிவு, இது திமுகவின் முடிவு," என்று ஆக்ரோஷமாகத் தெரிவித்தார்.

இந்தத் தேர்தலில், திருச்சி (கிழக்கு) மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டியிட்டார். திருச்சி (கிழக்கு) தொகுதியில், நான்காவது சுற்று முடிவில், திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜை விட 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் முன்னிலையில் இருந்தார். விஜய் 16,579 வாக்குகளும், இனிகோ இருதயராஜ் சுமார் 10,000 வாக்குகளும் பெற்றிருந்தனர். பெரம்பூர் தொகுதியில், திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகரை விட 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். இந்தத் தேர்தல் முடிவுகள், தமிழ்நாட்டின் நீண்டகால திராவிட அரசியல் களத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி, விஜய்யை ஒரு முக்கிய புதிய அரசியல் சக்தியாக நிலைநிறுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories