Anitha Radhakrishnan
திமுக அமைச்சரவையில் மீன் வளத்துறை மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த 2009-ம் ஆண்டு அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். கடந்த 2002-2006ம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது கடந்த 2006ம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
Enforcement Directorate
ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் வழங்கி சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தில் 2009ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதனடிப்படையில் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. மேலும், அனிதா ராதாகிருஷ்ணன், அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துகளை 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமலாக்கத்துறை முடக்கியது.
Chennai High Court
சொத்துகளை முடக்கியதற்கு எதிராகவும், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி அதிர்ச்சி கொடுத்துள்ளது.
Minister Anitha Radhakrishnan
இதுதொடர்பாக அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: கடந்த 2022-ம் ஆண்டு அனிதா ராதாகிருஷ்ணனின் 18 அசையா சொத்துகள் முடக்கப்பட்டது. இந்நிலையில், ஏற்கனவே அமலாக்கத் துறையால் முடக்கப்பட்ட சொத்துகளை, அனிதா ராதாகிருஷ்ணனும், அவரது குடும்ப உறுப்பினர்களும் அனுபவித்து வருவது தெரியவந்தது. அதன் மூலம் வந்த வருவாயை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து, மறைமுகமாக சுமார் ரூ.17.74 கோடி வருமானம் ஈட்டியிருப்பதும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரது தூத்துக்குடி, மதுரை, சென்னையில் உள்ள ரூ.1.26 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சரின் சொத்துக்கள் முடக்கப்பட்ட சம்பவம் திமுக நிர்வாகிகள் மற்றும் முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்துள்ளார்.