
2025-ல் நடந்த கரூர் நெரிசல் சம்பவம்தான் தனது அரசியல் பயணத்தின் மிகப்பெரிய வடு என்று தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவருமான சி. ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை அன்று உருக்கமாகக் கூறினார். கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை தவறிவிட்டதாகவும், 41 உயிர்களைப் பறித்த அந்த துயர சம்பவத்திற்கு தன் மீது பழிபோட முந்தைய திமுக அரசு முயன்றதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
கரூரில் உள்ள அட்லஸ் மைதானத்தில் நடந்த பிரம்மாண்டமான கூட்டத்தில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையிலான அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை வழங்கிய பிறகு விஜய் பேசினார். அப்போது அந்த சம்பவத்தை நினைவுகூர்ந்து உணர்ச்சிவசப்பட்ட அவர், வாழ்க்கையில் எந்த வெற்றியும் அப்பாவி உயிர்கள் பறிபோன வலியைப் போக்காது என்றார்.
"ஒருத்தன் வாழ்க்கையில எவ்வளவு பெரிய உயரத்துக்குப் போனாலும், சில வலிகளையும், காயங்களையும் மறக்கவே முடியாது. மத்த எல்லாத்தையும் விட, என்னை ரொம்ப பாதிச்ச ஒரு சம்பவம்னா அது கரூர் சம்பவம் தான்," என்று விஜய் கூறினார்.
அந்த துயரச் சம்பவத்திற்கு வழிவகுத்த நிகழ்வுகளை விவரித்த முதல்வர், பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்கவே "மக்கள் சந்திப்பு" என்ற பயணத்தை மாநிலம் முழுவதும் நடத்தியதாகத் தெரிவித்தார்.
பெரம்பலூரில் கூட்டம் அதிகமாக இருந்ததால் நிகழ்ச்சியை ரத்து செய்யும்படி காவல்துறை தனக்கு அறிவுறுத்தியதாகவும், ஆனால் கரூரில் அவ்வளவு பெரிய கூட்டம் இருந்தும் அதுபோன்ற எந்த எச்சரிக்கையும் தனக்கு வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
"நாமக்கல் கூட்டத்தை முடித்துவிட்டு நாங்கள் கரூருக்கு வந்தபோது, கரூர் காவல்துறை எங்களை எச்சரித்திருக்க முடியாதா? கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாது என்று நினைத்திருந்தால் அவர்கள் கூட்டத்தை ரத்து செய்திருக்கலாம். அதற்கான முழு உரிமையும் அவர்களுக்கு இருந்தது. ஆனால், அவர்கள்தான் எங்களை நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கே அழைத்து வந்தார்கள். நான் அவர்களை முழுமையாக நம்பினேன், அன்று அந்த போலீஸ் அதிகாரிகளுக்கு நன்றிகூட சொன்னேன். இப்படி ஒரு துயரம் நடக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை," என்றார் விஜய்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கிய விஜய், "இதற்கெல்லாம் யார் பொறுப்பு? யார் உத்தரவிட்டது? மக்களே, நான் உங்களைக் கேட்கிறேன், இவ்வளவு பெரிய கூட்டத்திற்குப் போதுமான போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதா?" என்று கேட்டார்.
தன்னைக் காண வந்த பல குழந்தைகள் இந்த துயரத்தில் உயிரிழந்தது, இந்த இழப்பைத் தனது தனிப்பட்ட இழப்பாக மாற்றிவிட்டது என்று தவெக தலைவர் கூறினார்.
"டிவியில என் போட்டோ வந்தா, 'விஜய் மாமா'ன்னு சொல்லி சிரிப்பாங்க. அந்த கடவுள் மாதிரி இருந்த குழந்தைகளை நாம இழந்திருக்கோம். நான் துக்கத்தில் இருந்தபோதுகூட, 'ஏன் ஓடி ஒளிந்துகொண்டாய்?' என்று சிலர் என்னைக் கேலி செய்து, என் மீது பழி சுமத்தினார்கள்," என்றார் அவர்.
உயிரிழந்தவர்களின் நினைவாக ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்த விஜய், எதிர்கால சந்ததியினர் இந்த சம்பவத்தை நினைவில் கொள்ளவும், இதுபோன்ற துயரங்கள் அரசியலாக்கப்படுவதைத் தடுக்கவும், தவெக சார்பில் கரூரில் அது கட்டப்படும் என்றார்.
"நமக்கு எதிராக நடந்த சதி மற்றும் சூழ்ச்சியை அடுத்த தலைமுறைக்குத் தெரியப்படுத்தவும், இனி யாரும் இதுபோல ஒரு அரசியல் சதியை நினைத்துக்கூடப் பார்க்கக் கூடாது என்பதற்காகவும், நமது தவெக சார்பில் கரூரில் ஒரு நினைவுச் சின்னம் கட்டப்படும் என்று அறிவிக்கிறோம்," என்றார் அவர்.
திமுகவை சாடிய விஜய்
மேலும், முந்தைய திமுக அரசு மீது ஊழல் மற்றும் அரசியல் பழிவாங்கல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த விஜய், வரவிருக்கும் இடைத்தேர்தலில் அந்த "தீய சக்தியை" மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால், இந்த நியமனங்கள் தற்காலிகமானவை என்றும், கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் தெளிவுபடுத்தியது.
முதல்வரின் வருகையின்போது, ஒருவர் தடுப்புகளைத் தாண்டி அவரது கான்வாய் அருகே ஓடிவந்ததால் சிறிது நேரம் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது. பாதுகாப்புப் படையினர் உடனடியாக அந்த நபரைத் தடுத்து நிறுத்தியதால், கான்வாய் எந்த இடையூறும் இன்றித் தொடர்ந்தது. விஜயை வரவேற்பதற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சாலையின் இருபுறமும் திரண்டிருந்தனர். மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு, தடுப்புகள் மற்றும் க்யூஆர் கோடு அடிப்படையிலான நுழைவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவரது கான்வாய் மீது மக்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.