
தமிழக அரசியல் கட்சிகளில் 0.45 சதவீதமே வாக்கு வாங்கி வைத்திருக்கக்கூடிய தேமுதிகவிற்கு தற்போது மிகப்பெரிய மவுசு ஏற்பட்டிருக்கிறது. விஜயகாந்த் மறைவுக்கு பின் தேமுதிக மீது அனுதாப அலை வீசக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டு இருக்கும் நிலையில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதை ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்பேன் என தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த் அந்த மாநாட்டில் ‘‘கூட்டணி பற்றி முடிவு எடுத்துட்டேன். ஆனால், இப்போது அறிவிக்கவில்லை’’ என சஸ்பென்ஸ் வைத்து மாநாட்டையே முடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து நிருபர்கள் அவரிடம் கூட்டணி குறித்து கேட்கும் போதெல்லாம் இன்னும் கால அவகாசம் இருக்கிறது. வேறுகட்சிகள் யாரும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. தேர்தல் தேதியும் அறிவிக்கவில்லை. தக்க சமயத்தில் நான் கூட்டணி குறித்து அறிவிப்பேன் சூசகமாகவே பேசிக் கொண்டு இருக்கிறார். தற்போது இறுதிக்கட்டமாக பாஜக கூட்டணியில் இணைவதற்கு பியூஸ் கோயலலும், திமுக கூட்டணியில் இணைவதற்கு அமைச்சர் எ.வ.வேலுவும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
பிரதமர் மோடி வருகையின்போது தேமுதிகவை கூட்டணிகள் இணைத்து விட வேண்டும் என பியூஸ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். ஆனால் அது தோல்வியில் போய் முடிந்தது. இப்போதும் பாஜக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு வருகிறது. ஏற்கனவே ராஜ்யசபா சீட்டு தராததால் அதிமுக மீது அதிருப்தியில் இருந்த பிரேமலதா விஜயகாந்த், முதல் கட்டமாக திமுகவுடன் பேச்சுவார்த்த தொடங்கி இருக்கிறார். திமுக தரப்பில் மதிமுக 12 தொகுதிகள் கேட்டு அடம்பிடித்து வருகிறது. இந்நிலைதான் மதிமுக கூட்டணியில் சேரவில்லை என்றால் தேமுதிகவை கூட்டணியில் சேர்க்கலாம் என அறிவாலயத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டிருந்தது.
தேமுதிக கூட்டணியில் சேர்வதால் திமுகவிற்கு பலம் என்ற கருத்து முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு, பிரேமலதா விஜயகாந்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். அப்போதுதான் பிரேமலதா விஜயகாந்த் தனக்கு 18 தொகுதி தரணும். ஒரு ராஜ்யசபா சீட்டு தரணும். தேர்தல் நிதி தரணும் என மிகப்பெரிய பட்டியலையும் நீட்டி இருக்கிறார். இது குறித்து மு.க.ஸ்டாலின் தரப்பில் ஆறு தொகுதிகள் ஒதுக்கி தரப்படும். தேர்தல் நிதியும் தேவையான அளவுக்கு தரப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்தப் பேரத்துக்கு பிரேமலதா விஜயகாந்த் ஒத்து வராததால் அதிமுக தரப்பில் ராஜேந்திர பாலாஜி மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது.
அப்போது 30 தொகுதிகள் தனக்கு தரணும். ராஜ்யசபா சீட்டு தரணும் என பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள் விடுதிருக்கிறார். ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி உடன்படவில்லை. இதற்கிடையே பாரதிய ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரேமலதா விஜயகாந்த் தனக்கு 30 இடங்கள், ஒரு ராஜ்யசபா பதவி, ஒரு அமைச்சர பதவி என பல கோரிக்கைகளையும் வைத்திருக்கிறார். இதற்கு பாஜக தரப்பில் சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் தற்போது அடுத்த வாரம் தமிழ்நாடு தேர்தல் நிலவரம் குறித்து தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆய்வு நடத்த இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்த நிலையில் ஏதாவது ஒரு முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் பிரேமலதா விஜயகாந்த் தள்ளப்பட்டுள்ளார். இதற்கிடையே ஆளுநர் நடத்திய தேநீர் விருந்தில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் கலந்து கொண்டிருந்தார். அப்போது நைனார் நாகேந்திரன் அவரை சந்தித்து பேசி இருந்தார். இந்த சந்திப்பு அரை மணி நேரம் நடைபெற்றது. அப்போது பாரதிய ஜனதா கட் சியில் இணையும்படி நைனார் நாகேந்திரன், எல்.கே.சுதீஷை வலியுறுத்தி கேட்டிருக்கிறார். ஆனால் ஏற்கனவே எல்.கே.சுதீஷ் டெல்லி சென்று பேச்சு வார்த்தை நடத்தி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நைனார் நாகேந்திரனிடம் எல்.கே.சுதீஷ் பேசும்போது கட்சி தலைமையிடம் பேசி முடிவை சொல்கிறேன் எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து விடைபெற்றார். இதற்கிடையே தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரேமலதா ‘‘பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் தனது முடிவை தெரிவிப்பேன். இதுவரை தேமுதிக தொண்டர்களுக்கு அண்ணியாக இருந்தேன். இனிமேல் அம்மாவாக இருப்பேன்’’ என பேசி இருக்கிறார்.
இதற்கு இடையே டெல்லியில் இருந்து அமித் ஷா தரப்பில் பிரேமலதா விஜயகாந்திடம் பேசப்பட்டு இருக்கிறது. அப்போது தேர்தல் நிதியாக மிகப்பெரிய அளவு செலவு தொகையை பாரதிய ஜனதா கட்சி ஏற்றுக்கொள்ளும். 20 தொகுதிகள் ஒதுக்கி தரப்படும். வேறு மாநிலத்திலிருந்து ராஜ்யசபா பதவி பெற்று தரப்படும் என பேசப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதன் நிமித்தமாகவே திமுக பக்கம் இணையலாம் என்கிற முடிவு எடுத்து வைத்திருந்த பிரேமலதா விஜயகாந்த் இப்போது இறுதி கட்டமாக பாஜக பக்கம் பல்டி அடித்து இருக்கிறார். இது குறித்த அறிவிப்பை அவர் வரக்கூடிய பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் அறிவிப்பார் எனத்தெரிய வருகிறது.
இந்நிலையில், பிரேமலதாவின் பேரத்தை சலிக்காத தேமுதிக நிர்வாகிகள், விஜயகாந்த் என்கிற ஒற்றை முகத்துக்காகத்தான் தேமுதிகவில் இருக்கிறோம். அதை பகடைக்காயாக்கி நாலாபுறமும் பேரம்பேசி கட்சியின் பெயரையும், நம்பகத்தன்மையையும் சிதைக்கிறார் பிரேமலதா. விரைவில் அவர் முடிவெடுக்காவிட்டால் கூட்டணிக்கு எந்த கட்சியும் அழைக்காமல் தவிர்த்து விடும் அபாயமும் இருக்கிறது’’ என அஞ்சுகிறார்கள்.