சிந்து நதியைத் தடுத்து நிறுத்தும் முடிவை ஒன்றிய அரசு மறுபரிசீலனை
பாகிஸ்தானுடன் வர்த்தக நிறுத்தம், எல்லை மூடல், தூதர்கள் வெளியேற்றம், போர்ப்பதற்றம், பாகிஸ்தான் மக்கள் வெளியேற்றம், நதிநீர் தடுத்து நிறுத்தம் என இத்தனை அதிரடி நடவடிக்கைகளை எடுக்கும் இந்திய ஒன்றிய அரசு, இதுவரை 800க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோதும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? பாகிஸ்தான் இசுலாமியர் நாடு என்பதால் பகை நாடென பதறி துடிக்கும் இந்திய அரசுக்கு, இத்தனை படுகொலைகள் செய்த பிறகும் இலங்கை நட்பு நாடாக இருப்பதற்கு காரணம் கொன்றது சிங்களவர், கொல்லப்பட்டது தமிழர்கள் என்பதால்தானே? எல்லையற்ற கருணையையும், எதிர்ப்பார்ப்பற்ற அன்பையும் தந்து பெற்ற பிள்ளைகளை வாழ்விக்கும் தாய்மையின் அடையாளமாக, சிந்து, கங்கை, யமுனை, கோதாவரி, காவேரி என்று எல்லா நதிகளுக்கும் பெண்களின் பெயரைச்சூட்டி நதிகளை தெய்வமாக வணங்கும் நாடு, மனிதனின் தீராத பாவங்கள் எல்லாம் கங்கை நதியில் மூழ்கினால் தீரும் என்று நம்புகின்ற நாடு, நதிநீரை தடுத்து கோடிக்கணக்கான மக்களை கடுமையாக தண்டிப்பது முறைதானா? என்பதை இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும். ஆகவே, 30 கோடி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் சிந்து நதியைத் தடுத்து நிறுத்தும் முடிவை இந்திய ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன் என சீமான் கூறியுள்ளார்.