
தமிழக அரசு பெண்களின் சமூக, பொருளாதார, கல்வி மற்றும் நல முன்னேற்றத்திற்காக பல்வேறு உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கட்டணமில்லா பேருந்து பயணம் திட்டத்தின் மூலம் பணிபுரியும் பெண்கள், உயர்கல்வி பயிலும் மாணவிகள், திருநங்கைகள் உட்பட அனைத்து பெண்களும் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டமும் செயல்படத்தப்படுகிறது இந்த திட்டம் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்படுகிறது. தற்போது 1.14 கோடி பெண்கள் பயனடைகின்றனர்.
புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பல்வேறு கடனுதவி திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2022-23-ல் ரூ.25,219 கோடி கடனுதவி, 4.39 லட்சம் குழுக்கள் பயனடைந்தன. 2023-24-ல் கடனுதவி ரூ.30,000 கோடியாக உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டமும் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.18,000 (5 தவணைகளில்) மற்றும் ரூ.4,000 மதிப்பிலான ஊட்டச்சத்து பரிசு பெட்டகம் வழங்கப்படுகிறது. இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் விதவைகள், கைவிடப்பட்ட பெண்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சுயவேலைவாய்ப்பிற்காக இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழக அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களின் திருமணத்திற்கு உதவுவதற்காக பல்வேறு திருமண உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திருமணச் செலவுகளைச் சமாளிக்க முடியாத ஏழைப் பெற்றோருக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.இந்த திட்டங்கள் மூலம் நிதி உதவியும், திருமாங்கல்யத்திற்கு தங்க நாணயமும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் திருமண உதவி திட்டங்கள் தொடர்பான தகவல்களை தற்போது பார்க்கலாம்.
தமிழக அரசின் திருமண உதவி திட்டங்கள்
தமிழக அரசின் சமூக நலத்துறை மூலம் 4 முக்கிய திருமண உதவி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன:
ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண நிதி உதவி திட்டம்
நோக்கம்: விதவைத் தாய்மார்களின் மகள்களின் திருமணத்திற்கு உதவும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
உதவி:
ரூ.25,000 மற்றும் 8 கிராம் தங்க நாணயம் (பொதுவான பெண்களுக்கு) வழங்கப்படுகிறது.
ரூ.50,000 மற்றும் 8 கிராம் தங்க நாணயம் இந்த திட்டம் பட்டதாரிகள் மற்றும் பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.
அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதி உதவி திட்டம்
நோக்கம்: ஆதரவற்ற பெண்களின் திருமணத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.
உதவி:
இந்த திட்டத்தின் கீழ் ரூ.25,000 மற்றும் 8 கிராம் தங்க நாணயம் (பொதுவான பெண்களுக்கு) வழங்கப்படுகிறது.
ரூ.50,000 மற்றும் 8 கிராம் தங்க நாணயம் (பட்டதாரிகள்/பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு) வழங்கப்படுகிறது.
டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவி திட்டம்
நோக்கம்: விதவைகளின் மறுமணத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
உதவி:
ரூ.25,000 மற்றும் 4 கிராம் தங்க நாணயம் (கல்வித் தகுதி இல்லாதவர்களுக்கு).
ரூ.50,000 மற்றும் 8 கிராம் தங்க நாணயம் (பட்டதாரிகள்/பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு) வழங்கப்படுகிறது.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண நிதி உதவி திட்டம்
கலப்பு திருமணங்களை ஊக்குவிக்கும் வகையில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இடையேயான திருமணங்களுக்கு வழங்கப்படுகிறது.
உதவி:
ரூ.50,000 மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.
திருமண உதவி தொகை பெற தகுதிகள்
பொதுவான தகுதிகள்:
வயது:
மணப்பெண்ணின் குறைந்தபட்ச வயது: 18 வயது (திருமண நாளில்).
விதவை மறுமணத்திற்கு: மணப்பெண்ணின் வயது 20 முதல் 40 வரை இருக்க வேண்டும்.
குடும்ப வருமானம்:
ஈ.வே.ரா. மணியம்மையார் திட்டங்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
அன்னை தெரசா மற்றும் டாக்டர் தர்மாம்பாள் திட்டங்களுக்கு வருமான உச்சவரம்பு இல்லை.
குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே ஒரு திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்.
கல்வித் தகுதி:
திட்டம் 1 (பொதுவான தகுதிகள்):
அன்னை தெரசா திட்டம்: கல்வித் தகுதி தேவையில்லை.
ஈ.வே.ரா. மணியம்மையார் திட்டம்: கல்வித் தகுதி தேவையில்லை.
திட்டம் 2 (பட்டதாரிகள்/பட்டயப் படிப்பு):
கல்லூரியில் பட்டம் பெற்றவர்கள் அல்லது தொலைதூரக் கல்வி/அரசு அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள்.
பட்டயப் படிப்பு முடித்தவர்கள் தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் படித்திருக்க வேண்டும்.
ஈ.வே.ரா. மணியம்மையார் திட்டம்: மணப்பெண்ணின் தாய் விதவையாக இருக்க வேண்டும். விதவை உதவித்தொகை பெறுபவர்களுக்கு விதவை மற்றும் வருமானச் சான்று தேவையில்லை.
அன்னை தெரசா திட்டம்: மணப்பெண் ஆதரவற்றவராக இருக்க வேண்டும் இதற்கு கண்டிப்பாக பெற்றோர் இறப்பு சான்று அல்லது ஆதரவற்றோர் சான்று தேவையாகும்.
டாக்டர் தர்மாம்பாள் திட்டம்: மணப்பெண் விதவையாக இருக்க வேண்டும்; விதவைச் சான்று தேவை.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டம்: கலப்பு திருமணத்திற்கு சாதிச் சான்று தேவை.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு:
பொதுவாக, திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். விதிவிலக்கு சூழ்நிலைகளில் திருமணத்திற்கு முதல் நாள் வரை ஏற்கப்படலாம்.
விதவை மறுமணத்திற்கு: திருமணம் முடிந்த 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கலப்பு திருமணத்திற்கு: திருமணம் முடிந்து 2 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கலாம்.
திருமண அழைப்பிதழ்.
மணமகள் மற்றும் மணமகனின் ஆதார் அட்டை.
குடும்ப அட்டை.
வருமானச் சான்று
விதவைச் சான்று (ஈ.வே.ரா. மணியம்மையார்/தர்மாம்பாள் திட்டங்களுக்கு).
ஆதரவற்றோர் சான்று அல்லது பெற்றோர் இறப்புச் சான்று (அன்னை தெரசா திட்டத்திற்கு).
கல்விச் சான்றிதழ்கள் (பள்ளி/கல்லூரி மாற்றுச் சான்று, மதிப்பெண் பட்டியல், பட்டம்/பட்டயச் சான்று).
வங்கிக் கணக்கு விவரங்கள்.
திருமண பதிவு சான்று (திருமணத்திற்கு பிறகு சமர்ப்பிக்க வேண்டும்).
மணமகள் மற்றும் மணமகனின் புகைப்படம்.
விண்ணப்பிக்கும் இடம்:
ஆன்லைனில்: இ-சேவை மையங்கள் மூலம் https://edistricts.tn.gov.in/socialwelfare/status.html இல் விண்ணப்பிக்கலாம்.
நேரடியாக: மாநகராட்சி ஆணையர், நகராட்சி ஆணையர், ஊராட்சி ஒன்றிய ஆணையர் அல்லது மாவட்ட சமூகநல அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.