Published : Jan 06, 2026, 11:06 AM ISTUpdated : Jan 06, 2026, 11:25 AM IST
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. வரலாற்று ஆதாரங்கள் குறித்த இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், இந்த வழக்கில் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை முன்வைத்து தமிழக அரசு, தர்கா அருகே உள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, மதுரை மாவட்ட நிர்வாகம், அறநிலையத் துறை, சிக்கந்தர் தர்கா நிர்வாகம் உள்ளிட்ட 26 மேல்முறையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக அனைத்து மனுக்களும் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
24
தமிழக அரசு வாதம்
அப்போது திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூண் இருந்ததற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் இல்லை என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் என்பதற்கான எந்தவித ஆவணங்களும், வரலாற்று ஆதாரங்களும் இல்லை. 1920-ம் ஆண்டு மாவட்ட நீதிபதி முழு மலையையும் ஆய்வு செய்த போது, மலை உச்சியில் தர்கா மட்டுமே உள்ளதாக குறிப்பிட்டிருந்தனர்.
34
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
அதேநேரம் 1961ம் ஆண்டு திருப்பரங்குன்றம் கோயில் தேவஸ்தானம் வெளியிட்ட புத்தகத்தில், மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றியதாக குறிப்பிடப்பட்டு இருப்பதாக கூறி, அதற்கான ஆவணத்தை மனுதாரர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் பரபரப்பு தீர்ப்பு வெளியாகியுள்ளது.
அதில், தமிழக அரசு மற்றும் அறநிலையத்துறை தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டது செல்லும். ஒவ்வொரு கார்த்திகையிலும் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசியல் காரணங்களை அடிப்படையாக கொண்டு அரசு செயல்படக் கூடாது. பொது அமைதிக்கு பிரச்சினை ஏற்படும் என்று அரசு காரணம் காட்டுவது ஏற்புடையது அல்ல. மலையில் உள்ள தீபத்தூண் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்தில் உள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றும்போது பொதுமக்களை அனுமதிக்கக்கூடாது. தீபமேற்றும்போது யாரை அனுமதிக்கலாம் என காவல்துறை, தொல்லியல் துறை தேவஸ்தானம் முடிவு செய்யலாம் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.