கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கியுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களான கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இரவு, பகலாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நேற்று உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுக்காக்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளி - கல்லூரிகளுக்கு அம்மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.