ரொம்ப கம்மி வட்டியில் ஒரு கோடி ரூபாய் வரை கடன்
தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களையும், மக்களின் முன்னேற்றத்திற்கு தேவையான முக்கிய திட்டங்களை பார்த்து பார்த்து செயல்படுத்து வருகிறது. அந்த வகையில் சொந்த தொழில் செய்ய விரும்புபவர்களுக்காக நிதிஉதவி திட்டமும், மானியமும் வழங்கி வருகிறது. மேலும் வங்கிகள் மூலம் கடன் உதவிக்கும் ஏற்பாடு செய்து வருகிறது. இந்த நிலையில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் மூலம் தொழில் முனைவோராக மாற்ற தமிழக அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் வரை கடன் உதவி திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
கடன் உதவி திட்டம்
இந்த திட்டத்தில் இரண்டு ஆண்டுகளில் 400 முன்னாள் இராணுவத்தினர் பயன்பெறும் வகையில், 400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஏறத்தாழ 120 கோடி ரூபாய் முதலீட்டு மானியம் மற்றும் 3 விழுக்காடு வட்டி மானியம் சேர்த்து வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த திட்டத்தை செயல்படுத்திடும் வகையில் "முதல்வரின் காக்கும் கரங்கள்" திட்டத்தின் கீழ் பயன்பெற முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
முன்னாள் ராணுவத்தினருக்கு கடன் உதவி
இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 78-வது சுதந்திர தின உரையின்போது, முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோரை தொழில் முனைவோராக உருவாக்கிட "முதல்வரின் காக்கும் கரங்கள்" என்ற புதிய திட்டத்தினை அறிவித்தார்கள்.
இத்திட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ரூபாய் ஒரு கோடி வரை வங்கிகள் வாயிலாக கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் எனவும், இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30% மூலதன மானியமும், 3% வட்டி மானியமும் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை தொடர்ந்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
யாருக்கெல்லாம் கிடைக்கும்.?
மேலும் இந்த அரசாணையில் திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப்பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும் எனவும், 55 வயதுக்குட்பட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் இராணுவப் பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்பெண்களும், முன்னாள் படைவீரர்களின் திருமணமாகாத மகள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் விதவை மகள்கள் இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க அழைப்பு
எனவே, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், இராணுவப் பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்பெண்கள் , முன்னாள் படைவீரர்களின் திருமணமாகாத மகள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் விதவை மகள்கள் ஆகியோர் சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பித்து பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.