
தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு செய்யப்பட்டிருக்கும் திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகளை ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் லிஸ்ட் போட்டுள்ளார்.
* கோவிட் பெருந்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வை, 2022 முதல், ஒன்றிய அரசுக்கு இணையாக உயர்த்தி வழங்கியதுடன், ஒன்றிய அரசுக்கு இணையாக காலதாமதமின்றி அகவிலைப்படி உயர்வு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
* உங்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல், அரசுப் பணியாளர்கள் தங்களின் ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து, பணமாக பெற்றுக்கொள்ளும் நடைமுறையை மீண்டும் செயல்படுத்தியிருக்கிறோம்.
* நாட்டிலேயே வேறெங்கும் இல்லாத புதிய திட்டமாக அரசுப் பணியாளர்கள் விபத்தில் உயிரிழக்க நேர்ந்தால் ஒரு கோடி ரூபாயும், இயற்கை மரணமடைந்தால் பத்து இலட்சம் ரூபாயும் ஆயுள் காப்பீட்டுத் தொகையாக வழங்கிகொண்டு இருக்கிறோம்.
* பணியிடை மரணமடையும் அரசு அலுவலர்களின் குழந்தைகளுக்கு, ஐந்து இலட்சம் ரூபாய் முதல், பத்து இலட்சம் ரூபாய் வரை திருமணச் செலவிற்கான உதவியாகவும், மேலும், உயர்கல்வி பயில 10 இலட்சம் ரூபாய் வரை நிதியுதவியும் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
* அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த திருமண முன்பணம், பத்தாயிரம் ரூபாயிலிருந்து ஐந்து இலட்சம் ரூபாயாக உயர்த்தியிருக்கிறோம்.
* அரசுப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட கல்வி முன்பணம் – தொழிற்கல்விக்கு ஐம்பதாயிரம் ரூபாயிலிருந்து, ஒரு இலட்சம் ரூபாயாகவும் - கலை மற்றும் அறிவியல் கல்விக்கு 25 ஆயிரம் ரூபாயிலிருந்து, 50 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கியிருக்கிறோம்!
* அனைத்து மாநிலங்களைக் காட்டிலும், அதிகமாக, தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வீடு கட்டுவதற்கான முன்பணம், 40 இலட்சம் ரூபாயிலிருந்து 50 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிகொண்டு இருக்கிறோம்.
* ஒழுங்கு நடவடிக்கைகளால் பணியிலிருந்து ஓய்வுபெறும் நாளன்று தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்படும் சூழ்நிலையை அகற்றி, அரசுப் பணியாளர்களை ஓய்வுபெற அனுமதித்து ஆணையிட்டிருக்கிறோம்.
* ஓய்வூதியப் பணிக்கொடையை 20 இலட்சம் ரூபாயிலிருந்து 25 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்குகிறோம்.
* ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு உதவி 10 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. மேலும், அவர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகையை 500 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குகிறோம்!
* பெண் அரசு அலுவலர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, மகப்பேறு விடுப்பை ஒன்பது மாதங்களிலிருந்து, 12 மாதங்களாக உயர்த்தியிருக்கிறோம்.
* பெண் அரசு ஊழியர்கள் தகுதிகாண் பருவத்தில் மகப்பேறு விடுப்பில் செல்ல நேர்ந்தால், அந்தக் காலத்தையும் தகுதிகாண் பருவமாக கருத வேண்டும் என்று ஆணை வெளியிட்டிருக்கிறோம்.
* சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்களின் சிறப்பு ஓய்வூதியத்தை உயர்த்தி இருக்கிறோம்.
* குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வனக்களப் பணியாளர்களின் பணி நிறைவின் போது வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை, ஒரு இலட்சம் ரூபாயிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்குகிறோம்.
* அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிறைவின்போது வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ஐம்பதாயிரம் ரூபாயிலிருந்து ஒரு இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது.
* சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்கள் இறந்துவிட்டால், அவர்களின் குடும்பங்களுக்கு, குடும்ப ஓய்வூதியமாக ஆயிரத்து 200 ரூபாயும், சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வனக்களப்பணியாளர்கள் உள்ளிட்ட, இதர சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்கள் இறந்துவிட்டால், அவர்களின் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியமாக ஆயிரத்து நூறு ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
* சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட இதர சிறப்பு காலமுறை ஊதிய பணியாளர்கள் இறந்துவிட்டால், அவர்களின் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. சிறப்பு ஓய்வூதியம் பெற்றுவரும் இந்தப் பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால், இறந்த பணியாளர்களின் இறுதிச் சடங்கு செலவினங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
* நிரந்தர ஆசிரியர் பணியிடங்களில் சேர்வதற்காக பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் அளிக்கப்படுகிறது.
* இது எல்லாவற்றிற்கும் மகுடம் சூட்டுவது போன்று, உங்களின் இருபதாண்டுகாலக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய, புதிய திட்டமான “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தியிருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.