நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் சட்டப்பேரவை தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருப்பவர் ஓ.எஸ். மணியன். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் கைத்தறித்துறை அமைச்சராக இருந்து வந்தார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கிழக்கு கடற்கரை சாலையில் நாகப்பட்டினம் நோக்கி இன்று காரில் வந்து கொண்டிருந்தார்.
தலைஞாயிறு திருப்பூண்டி காரைநகர் அருகே அவரது கார் வந்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் குறுக்கே வந்துள்ளது. இதனால் சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் கார் பைக் மீது மோதாமல் காரை திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே உள்ள பெரியாச்சி அம்மன் கோவில் மதில் சுவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரின் முன்பக்க பகுதி சேதமடைந்த நிலையில் சீட் வெல்ட் அணிந்திருந்ததால் முன்னாள் அமைச்சர் மற்றும் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். லேசான சிறு காயத்தோடு தற்போது அவர்கள் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த அன்பழகன் என்பவரும் மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.வேதாரண்யத்தில் இருந்து கீழ்வேளூர் செயல்வீரர்கள் கூட்டத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் சென்ற போது கார் விபத்தில் சிக்கிய சம்பவம் அக்கட்சி தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.