Chennai Metro Rail : சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிகொண்டே செல்கிறது. இதன் காரணமாக குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல பல மணி நேரம் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் தான் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பொதுமக்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 30 முதல் 40 நிமிடங்களில் சென்று சேர முடிகிறது. அந்த வகையில் தினமும் சுமார் 3.1 லட்சம் பயணிகள் மெட்ரோவை பயன்படுத்துகின்றனர்.
சென்னை மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
எனவே சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதி மக்களும் பயன் அடையும் வகையில் மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 128 நிலையங்களோடு 118.9 கிமீ நீளத்துடன் இந்த மெட்ரோ திட்டம் ரூ. 63,246 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு, இதுவரை சுமார் 80% பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் அதி நவீன தொழில்நுட்பத்தை மெட்ரோ ரயிலில் புகுத்திடும் வகையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் செயப்படுத்திட உள்ளது.
ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்
இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டது. இதனையடுத்து நேற்று பூந்தமல்லி முதல் முல்லைத்தோட்டம் வரை 2.5 கிலோமீட்டர் தூரத்திற்கு ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், மெட்ரோ ரயில் வழித்தடத்தில் மின் வயரில் ஏற்பட்ட தீப்பொறி காரணமாக, நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து இரவு நேரத்தில் மீண்டும் சோதனை ஓட்டம் தொடங்கி வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்
சோதனை ஓட்டம் நிலை என்ன.?
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், இரண்டாம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 4ல் பூந்தமல்லி பணிமனை மெட்ரோ நிலையம் முதல் முல்லை தோட்டம் மெட்ரோ நிலையம் வரை இரண்டாம் கட்டப் பிரிவின் முதல் வழித்தட சோதனை மற்றும் மெட்ரோ இரயில் ஓட்டத்தை தொடங்கியுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அசித்திக், இரண்டாம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 4ல் உயர்மட்ட வழித்தடத்தில் நடத்தப்பட்ட முதல் வழித்தட சோதனை இரண்டாம் கட்ட திட்டத்தின் முன்னேற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்" என்று கூறினார்.
3 கி.மீ நடைபெற்ற சோதனை ஓட்டம்
இந்த உயர்மட்ட வழித்தடம் பூந்தமல்லி புறவழிச்சாலை நிலையத்திலிருந்து முல்லைத் தோட்டம் நிலையம் வரை சுமார் 3 கி.மீ நீளம் கொண்டது. இது பூந்தமல்லி பணிமனையுடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்போதைய சோதனை மற்றும் செயல்பாட்டுக்கு பூந்தமல்லி பணிமனை இந்த பகுதியின் மெட்ரோ இரயிலுக்கான சோதனைகளை ஒருங்கிணைக்கும் மையமாக இருக்கும் படிப்படியாக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில் வழித்தட சோதனைகளுக்கு புதிய பிரிவுகளைச் சேர்க்கும் என தெரிவித்தார்