
நாளொன்றுக்கு 5479.45 டன் நிலக்கரியை எரித்து, 17 கோடி லிட்டர் கடல் நீரை உறிஞ்சி, 660 மெகாவாட் மின்சாரம் வடசென்னை அனல் மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தச் செயல்பாட்டின்போது, 1972 டன் சாம்பல் கழிவு உற்பத்தியாகிறது. ஏற்கெனவே எண்ணூரில் 3300 மெகாவாட் அளவிலான 2 அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனல் அவற்றில் இருந்து வரும் சாம்பல்கழிவுகள் வெளியேற்றப்பட வழி இல்லாமல் தேங்கிக் கிடப்பது பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.
வடசென்னையில் தற்பொழுது தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான இரண்டு அனல் மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த இரண்டு அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியேற்றப்படும் சாம்பலானது அந்த சாம்பல் கிணறுகளில் சேமிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த சாம்பல் வெளியேறுவதை தாங்கிக் கொள்ளும் அளவுகளுக்கான போதுமான கிணறாக அது இல்லை. இந்த நிலையில் மேலும் புதிதாக வரவிருக்கும் வடசென்னை அனல் மின் நிலையம் – III மற்றும் எண்ணூர் SEZ STPP-களின் மூலம் வெளியேற்றப்படும் சாம்பல்களை சேமிக்கவோ, பாதுகாக்கவோ, புனரமைப்போ செய்யவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு வெப்ப நிலையங்களின் சாம்பலானது கூடுதல் சாம்பல்களாகவே ஏற்கெனவே வயிறு பிதுங்கி நிற்கும் வடசென்னை அனல் மின் நிலையங்களின் உள்ள கிணறுகளிலேயே கூடுதலாக சேமிக்கவோ, நிரப்பவோ வேண்டி வரும். ஆனால் தற்போதே சாம்பல் கிணறு நிரம்பியே உள்ளதால் மேற்கொண்டு அதில் எப்படி சாம்பல்களை நிரப்ப முடியும்?
இதனால், புதிதாக வரவிருக்கும் அனல் மின் நிலையங்களின் சாம்பல்களை சேமிக்க முடியாததால் சுற்றுச்சூழல் மாசுபடும் அபாயம் ஏற்படும். சீர்கேடும் ஏற்பட்டு மக்களின் நலன் பாதிக்கப்படும். அத்தோடு இல்லாமல், மக்களின் மத்தியில் எதிர்மறையான எண்ணத்தை உருவாக்கும். சமூக ஆர்வலர்களின் கேள்விக்கும் பதிலளிக்க வேண்டிய நிர்பந்தம் எழும். மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும். எனவே, புதிதாக வரவிருக்கும் அனல் மின் நிலையங்கள் உற்பத்தி தொடங்குவதற்கு முன்பு சாம்பல் கிணறை கட்டமைப்பதன் அவசியம் கருதி கட்டுமான பணி உடனடியாக தொடங்கப்பட வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத் தரவுகளின்படி, கடந்த சில ஆண்டுகளில் மட்டுமே இப்போதுள்ள அனல் மின் நிலையத்தின் மின் உற்பத்தி மையங்கள் 50 சதவிகிதத்திற்கும் மேலான நாட்களில் வடசென்னையின் காற்று மாசுபாட்டிற்குக் காரணமாக அமைந்தன. அதுவே இன்னும் சரிசெய்யப்படாத நிலையில் சாம்பல் கிணறுகளையும் சரி செய்யாமல் உள்ளனர். நிலக்கரியில் இயங்கும் அனல் மின் நிலைய புகைப்போக்கியில் கந்தக டையாக்சைட், கரியமில மோனாக்சைட், நைட்ரஜன் டையாக்சைட், பாதரசம், ஈயம் போன்ற வாயுக்கள் வெளியாகும் என்று அமெரிக்காவை சேர்ந்த யூனியன் ஆஃப் கன்சர்ன்ட் சயின்டின்ஸ்ட் என்ற விஞ்ஞானிகள் அமைப்பு எச்சரித்துள்ளது.
இதனால் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்னைகள் பற்றி காற்று மாசுபாட்டிற்கான மருத்துவர்கள் என்ற அமைப்பைச் சேர்ந்த விஸ்வஜா சம்பத் பேசியபோது, "நிலக்கரி அனல் மின் நிலையத்திலிருந்து வெளியாகும் சாம்பல் தூசுகளில் இருந்து காற்றில் கலக்கும் நுண்துகள்கள், நுரையீரலின் உட்பகுதி வரை சென்று ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகளை உண்டாக்கும்.
அதோடு, குழந்தைகள் எடை குறைபாட்டோடு பிறப்பது, குறைப் பிரசவம் நிகழ்வது, குழந்தையின் உடல் மற்றும் மூளை வளர்ச்சியில் தடைகள் ஏற்படுவது எனப் பல பாதிப்புகளை இந்த விஷ வாயுக்கள் ஏற்படுத்தும் என ஆய்வுகள் கூறுகின்றன. சாம்பல் கழிவுகளின் வழியாகவும், புகைப்போக்கி வழியாகவும், நிலக்கரியை எரிக்கும்போது அதிலிருந்து வாயுக்களாக வெளியாகும். பாதரசம், ஈயம், ஆர்சனிக், காட்மியம் போன்ற விஷ உலோகங்கள், சிறுநீரகம், மூளை, நுரையீரல், கண்கள், தோல், இதயம் போன்ற உடல் உறுப்புகளுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்" என்று எச்சரிக்கிறார்.
வடசென்னை அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் சாம்பலை வெளியேற்றாமல் மேலும் மேலும் அடக்கி வருவதால் அதனால் ஏற்படும் சூடான நீரை அப்படியே கழிமுகப் பகுதியில் திறந்துவிடுவதால், மீன் வளம் பெருமளவில் குறைகிறது. இனப்பெருக்கத்திற்காக உள்ளே வரக்கூடிய மீன்கள் அந்த வெப்பநீரில் உயிரிழந்துவிடுகின்றன. அவற்றுக்குத் தேவையான தாவர வளம் அங்கு இருப்பதில்லை. இதனால், கழிமுகப் பகுதியிலும் கடலோர அலையாத்திக் காடுகளிலும் இறால், நண்டு சேகரிக்கச் செல்லும் மீனவப் பெண்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படுகிறது. ஏற்கெனவே இருக்கும் அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் வெந்நீர், கடல்வாழ் உயிரினங்களையும் அவற்றையே நம்பியிருக்கக்கூடிய மீனவர்களின் வாழ்வாதாரங்களையும் மோசமாகப் பாதிக்கின்றது. ஆற்றில் இறங்கி வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, வெந்நீர் வெளியேற்றத்தால் மீனவர்களுக்குப் பலமுறை வெந்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. எங்களையும் எங்கள் நிலத்தின் வளங்களையும் அழிக்கும் திட்டத்தால், என்ன நன்மையை நாங்கள் கண்டுவிட முடியும்?" என்று கேள்வியெழுப்புகிறார் அப்பகுதி மக்கள்.
இப்போதுள்ள சாம்பல் குளம் 1996 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. அதன் பிறகு சாம்பல் தடுப்பணையின் பழுது, பராமரிப்புக்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது சம்பந்தமாக, வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு சாம்பல் தடுப்பணையுடன் கூடிய சாம்பல் தடுப்பணையின் பகுதிக்கு ஏற்கனவே 1 மீட்டர் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் வெளியேற்றங்களை கருத்தில் கொண்டும், என்ஜி வழங்கிய வழிகாட்டுதல்களைக் கருத்தில் கொண்டும் சாம்பல் தடுப்பணையை மேலும் உயர்த்துவதற்கான அவசரநிலை இப்போது எழுந்துள்ளது. சாம்பல் தடுப்பணையை மேலும் உயர்த்தி, பலப்படுத்துவதற்கு 20.02.2019 அன்று ஐஐடி மூலம் தேவையான ஆலோசனைப் பணிகள் வழங்கப்பட்டன. அக்டோபர் 2021 -ல் சாம்பல் தடுப்பணையை மேலும் 6 மீட்டர் உயர்த்துவதற்காக ஐஐடி-யிடமிருந்து அவர்களின் ஆலோசனை அறிக்கை பெறப்பட்டது. கூட்டு விவாதத்தின் அடிப்படையில், மேலும் உயர்த்தும் பணிகள் தொடர்பான சில சிக்கல்களை தெளிவுபடுத்துவதற்காக ஐஐடியிடமிருந்து இறுதி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கெல்லாம் ஒரே தீர்வு, சாம்பல் கிணறுகளை பராமரிப்பது. மேலும் மேலும் சாம்பல்களை வெளியேற்றாமல் சேமித்து வைப்பது பல்வேறு சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தும், மேற்கொண்ட உற்பத்தி பணிகளையும் பாதிக்கும். ஒரு நிலம் தன் ஆரோக்கியமான அமைப்பை இழக்கும்போது, அதைச் சார்ந்து வாழும் மக்களின் வாழ்வியலும் வரலாறாகி விடுகிறது.
அப்படி வரலாறாகிப் போன நினைவுகளைச் சுமந்திருக்கும் எண்ணூர் மக்கள் பாதிக்கப்படாமலிருக்க புதிதாக வரவிருக்கும் அனல் மின் நிலையங்கள் உற்பத்தி தொடங்குவதற்கு முன்பு சாம்பல் கிணறை கட்டமைப்பதன் கருதி கட்டுமானப் பணிகள் உடனடியாக தொடங்கப்பட வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். வருமுன் காப்பதே சிறந்தது. தேர்தலுக்கு முன்பே இந்தத் திட்டத்தை செய்வது திமுக அரசுக்கு இன்னும் சாலச் சிறந்தது.