நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காய்கறிகளுக்கு கொள்முதல் விலை நிர்ணயிப்போம் என வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இன்று வரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என அன்புமணி ராமதாஸ் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் தக்காளி விளைச்சல் அதிகரித்திருப்பதால் சந்தைகளில் அதன் கொள்முதல் விலை கிலோ ரூ.3க்கும் குறைவாக சரிந்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தக்காளியை வாங்க ஆள் இல்லாததாலும், அதை சந்தைக்கு கொண்டு செல்வதற்காக ஆகும் செலவுக்குக் கூட தக்காளி விலை கட்டுபடியாகாது என்பதாலும் உழவர்கள் தக்காளியை சாலைகளிலும், கால்வாய்களிலும் கொட்டி வருவது வேதனையளிக்கிறது. தக்காளி விலையை நிலைப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.