School Education Department: தமிழக பள்ளிக்கல்வித்துறை, 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களின் முழு ஆண்டுத் தேர்வு மதிப்பெண்களை ஏப்ரல் 30-க்குள் எமிஸ் தளத்தில் பதிவேற்ற உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முன்கூட்டியே 1 முதல் 9 வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி ஏப்ரல் 1 முதல் 16ம் தேதி வரை தேர்வு நடைபெற்றது. இதனையடுத்து ஏப்ரல் 17ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு 2026 –2027ம் கல்வியாண்டிற்கான முதல் வேலை நாள் வரும் ஜூன் 1ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெயில் அதிகம் இருக்கும் பட்சத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
24
பள்ளிக்கல்வித்துறை
தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தகவல்களை எமிஸ் (Education Management Information System) எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் மூலம் ஆன்லைனில் பள்ளிக் கல்வித்துறை பராமரித்து வருகிறது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளின் அடிப்படையான விவரங்கள், கல்வி உதவித்தொகை, மதிப்பெண்கள், அரசின் நலத்திட்ட உதவிகள், கலை திருவிழாக்களில் பங்கேற்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்நிலையில் பள்ளி மாணவர்களின் முழு ஆண்டுத் தேர்வு மதிப்பெண்களை எமிஸ் தளத்தில் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
34
முழு ஆண்டுத் தேர்வுகள்
இதுதொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 3-ம் பருவ மதிப்பீடு மற்றும் முழு ஆண்டுத் தேர்வுகள் நடைபெற்றுள்ளன.
இத்தேர்வுகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் மதிப்பெண்களை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் ‘எமிஸ்’ தளத்தில் பதிவேற்றம் செய்து, மாணவர் தேர்ச்சி அறிக்கைக்கு வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் ஒப்புதல் பெற வேண்டும். நடப்பு (2025-26) கல்வி ஆண்டில் கற்றல் செயல்பாட்டை நிறைவு செய்யும் மாணவர்களை அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி அளிப்பது. மாற்றுச் சான்றிதழ் வழங்கும் பணியை மே 11-ம் தேதி முதல் எமிஸ் தளம் மூலம் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.