தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து, ஐந்து மாதங்களில் 7,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏடிஸ் ஏஜிப்தி கொசுக்களின் பெருக்கம் மற்றும் பருவநிலை மாற்றம் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
டெங்கு என்பது ஒரு வகையான வைரஸ் காய்ச்சல். கழிவு நீர் அல்லாத நல்ல தண்ணீரிலும் முட்டையிட்டு வளர்கிற `ஏடிஸ் ஏஜிப்தி என்ற கொசுவின் மூலம்தான் மனிதர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்படுகிறது. வெயில், மழை என ஒரே நாளில் வெவ்வேறு பருவநிலை நிலவும்போது பரவுகிறது. வெறும் 3 வாரங்கள் மட்டுமே வாழக்கூடிய ஏடிஸ் ஏஜிப்தி கொசு, சிரட்டை, டயர், பிளாஸ்டிக் கப், ஆட்டுரல், ரப்பராலான கால் மிதியடி மற்றும் தேங்கி நிற்கிற சிறிதளவு நல்ல தண்ணீரிலும் முட்டையிட்டு பெருகிவிடுகிறது.
25
இருமல், தும்மலால் டெங்கு பரவாது
டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்டவர்களைக் கடித்துவிட்டு, மற்றவர்களை கடித்தால் அத்தனை பேருக்கும் டெங்கு காய்ச்சல் பரவும். இதன் காரணமாக ஒரே நேரத்தில் பலரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவமனைகளில் பார்த்தால் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் கொசு வலைக்குள்தான் வைத்திருப்பார்கள். பாதிக்கப்பட்டவரைக் கடித்த கொசு மற்றவர்களைக் கடித்தால், மருத்துவமனையில் இருக்கிற அத்தனை பேருக்கும் டெங்கு வந்துவிடலாம் என்கிற எச்சரிக்கை இதற்கு காரணம். மற்றபடி, இருமல், தும்மல், தொடுதல் போன்ற வழிகளின் மூலம் டெங்கு வைரஸ் பரவாது.
35
ஐந்து மாதங்களில் 7,500 பேர் பாதிப்பு
இந்நிலையில் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு கடந்த ஐந்து மாதங்களில் 7,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்: பருவநிலை மாற்றத்தால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இரண்டு மாதங்களாக அதிகரித்துள்ளது. அவற்றை கட்டுப்படுத்த, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். கொசு ஒழிப்பு பணிகளில் சுகாதாரத்துறை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும், மருந்து போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
55
மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது அவசியம்
டெங்கு பாதிப்பு தொடர்ந்து இருக்கும் என்பதால், காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகள் ஓரிரு நாட்களுக்கு பின் இருந்தால், தாமதிக்காமல் மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது அவசியம். மேலும், வீடுகள், சுற்றுப்புறங்களில் கொசு உற்பத்தியாக படி துாய்மை பணியை அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும். இதன் வாயிலாக மட்டுமே பாதிப்பை ஓரளவுக்கு தடுக்கலாம் என கூறியுள்ளனர். மேலும் காய்ச்சல் பாதிப்பு, மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சந்தேகங்களுக்கு 104 என்ற எண்ணை அழைக்கலாம்.