108 வைணவ திவ்ய தேசங்களில் முதல் திவ்ய தேசமாகவும், பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் மார்கழி மாதத்தில் 20 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்நாளில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுவதையொட்டி டிசம்பர் 23ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுந்த ஏகாதசி திருவிழாவின் முக்கிய நாளான சொர்க்கவாசல் திறப்பு (பரமபதவாசல் திறப்பு) நடைபெறுவதை முன்னிட்டு டிசம்பர் 23ம் தேதி அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பள்ளி, கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது.
மேலும், முக்கிய அரசு அலுவலகங்கள், அரசு கருவூலகங்கள் ஆகியவை குறைந்த பணியாளர்களுடன் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மற்றொரு சனிக்கிழமை திருச்சி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டும் என தெரிவித்துள்ளார்.