இந்த பரபரப்புக்கு மேலும் தீ ஊற்றும் வகையில், விருதுநகர் மக்களவை உறுப்பினரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மாணிக்கம் தாகூர் சமூக வலைதளமான X-ல் பதிவை ஒன்று வெளியிட்டுள்ளார். 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வென்ற 58 தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் 20,000-க்கும் குறைவாக இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் மூலம், காங்கிரஸ் ஆதரவு இல்லையெனில் திமுகவின் தேர்தல் வெற்றி பாதிக்கப்படும் என்ற மறைமுக எச்சரிக்கையை மாணிக்கம் தாகூர் விடுத்ததாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதற்கு முன், திமுக ஐடி விங்-ஐ “சில்ற ஐ.டி. விங்”, “அரசவைக் கவிஞர்கள்” என கிண்டலடித்த அவரது பதிவுகள், கூட்டணி உறவுகளில் உள்ள விரிசலை வெளிப்படையாக காட்டியுள்ளது.
ஒருபுறம் திமுகவை நீண்டகால நட்புக் கட்சி என புகழ்ந்து பேசும் மாணிக்கம் தாகூர், மறுபுறம் தொடர்ந்து கடும் விமர்சனங்களை முன்வைப்பது அரசியல் குழப்பத்தை அதிகரித்துள்ளது. 2026 தேர்தலுக்கு முன் இந்த மோதல் எந்த திசையில் செல்லும், கூட்டணி தொடருமா அல்லது பிளவு ஏற்படுமா என்ற கேள்வி தமிழக அரசியலில் தற்போது பெரிய விவாதமாக மாறியுள்ளது.