முதலமைச்சர் விஜய், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த விலை உயர்வால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் விஜய் தற்போது அதிரடியான கடிதத்தை ஒன்றிய அரசுக்கு அனுப்பியுள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் முதலமைச்சர் விஜய். பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.3 வீதம் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று அவர் கூறியுள்ளார். குறிப்பாக, ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்த உடனேயே இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் நேரங்களில் பொதுமக்களுக்கு பலன் கிடைப்பதில்லை, எண்ணெய் நிறுவனங்கள் லாபத்தை மட்டுமே முன்னிலைப்படுத்துகின்றன என்றும் விஜய் குற்றம் சாட்டியுள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தினசரி இருசக்கர வாகனங்கள் மற்றும் சிறிய வாகனங்களை பயன்படுத்தும் குடும்பங்களின் மாதச் செலவு இதனால் அதிகரிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
22
முதலமைச்சர் விஜய் கண்டனம்
மேலும், வங்கிக் கடன் பெற்று வாடகை வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கும் இந்த விலை உயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்று விஜய் கூறியுள்ளார். எரிபொருள் விலை உயர்வால் வாடகை வாகன கட்டணங்களும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், அதன் தாக்கம் அன்றாட பொருட்களின் விலையிலும் பிரதிபலிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதனால் பொதுமக்கள் வாங்கும் திறன் குறையும் அபாயமும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களும் இந்த எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்படும் என விஜய் கூறியுள்ளார். உற்பத்திச் செலவு அதிகரிப்பதால் சந்தை மற்றும் ஏற்றுமதி துறைகளில் மந்தநிலை உருவாகும் சூழல் என்றும் அவர் தெரிவித்தார். எனவே, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.