Tamil Nadu CM Vijay's Simple Routine: ஒரு சாதாரண அரசு ஊழியரை போன்று தினமும் காலையில் தலைமைச் செயலகம் வரும் முதல்வர் விஜய், மாலையில் தான் வீடு திரும்புகிறார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட நடிகர் விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், திமுக கூட்டணி கட்சிகளான விசிக, இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உதவியுடன் தவெக ஆட்சி அமைந்துள்ளது. விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். நடிகரும், தவெக தலைவருமான விஜய் முதல்வரானது முதல் தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள், அரசியல் தலைவர்களை விட தனித்து செயல்பட்டு வருகிறார்.
24
வேட்டி, சட்டையை தவிர்த்து கோட், ஷூட் அணியும் விஜய்
தமிழகத்தில் இதுவரை இல்லாத அரசியல் நாகரீகமாக அரசியலில் பரம எதிரிகளான திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் வைகோ, அன்புமணி ஆகியோரை சந்தித்து அனைத்து தரப்பினரின் பாரட்டுகளையும் அள்ளினார். மேலும் தமிழக அரசியல்வாதிகள் என்றால் வேட்டி, சட்டை அணிய வேண்டும் என்ற நடைமுறையை மாற்றி கோட், ஷூட் அணிந்து வழக்கத்தை மாற்றினார் விஜய்.
வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்து சாப்பிடும் முதல்வர்
பொதுவாக முதல்வர்கள் அல்லது முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் தலைமைச் செயலகத்துக்கு வரும்போது, அவர்களுக்கான பிரத்யேக உணவு ஏற்பாடுகள் அல்லது ஸ்டார் ஹோட்டல்களில் இருந்து உணவுகள் வரவழைக்கப்படுவது வழக்கம். ஆனால், இதற்கு மாறாக முதல்வர் விஜய் மிகவும் எளிமையான முறையில் வீட்டிலிருந்து கொண்டு வரும் உணவை தான் தினமும் மதியம் தலைமை செயலகத்தில் வைத்து சாப்பிடுகிறார்.
34
முடிக்கு 'டை' இல்லை; மேக்கப் இல்லை
தான் ஒரு மாநிலத்தின் முதல்வர் என்ற ஆடம்பரம் ஏதுமின்றி, ஒரு சாமானியரை போல வீட்டிலிருந்து டிபன் பாக்ஸில் உணவு எடுத்து வந்து விஜய் சாப்பிடுவது அவரது எளிமையை வெளிப்படுத்துவதாக பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் 'முதல்வர் என்றால் முடிக்கு டை அடிக்க வேண்டும். மேக்கப் போட்டுக்கொள்ள வேண்டும்' என்ற வழக்கத்தையும் விஜய் அதிரடியாக மாற்றியுள்ளார். நரைத்த வெள்ளை முடி தாடியுடன் எளிமையாக இருக்கும் விஜய், கோட், ஷூட் அணிந்தபடி தனது வழக்கமான டிரேட் மார்க் புன்னகையுடன் முதல்வர் பணியை செய்து வருகிறார்.
இது மட்டுமின்றி ஒரு சாதாரண அரசு ஊழியரை போன்று தினமும் காலையில் தலைமைச் செயலகம் வரும் முதல்வர் விஜய், மாலையில் தான் வீடு திரும்புகிறார். இதற்கு முதல்வர் விஜய் வீடு அமைந்திருக்கும் நீலாங்கரை தலைமைச் செயலகத்தில் இருந்து சுமார் 17 கிமீ தொலைவில் இருப்பதும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. இவ்வளவு தொலைவில் இருந்து விஜய் தினமும் தலைமைச்செயலகம் வருவதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கு காவல்துறைக்கு கடும் சிரமம் இருப்பதால் போயஸ் கார்டன் பகுதியிலேயே தங்க விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒட்டுமொத்தத்தில் தமிழகத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு எளிமையான முதல்வர் ஒருவர் கிடைத்து விட்டார் என தவெகவினர் பெருமிதம் தெரிவிக்கின்றனர்.