இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு.. இது சிலரின் கண்களை உறுத்துகிறது.. முதல்வர் ஸ்டாலின்

Published : Jan 29, 2026, 07:43 AM IST

நாட்டிலேயே இஸ்லாமியர்களுக்கான பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இந்த அமைதி சிலரின் கண்களை உறுத்துவதாக கும்பகோணத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹால்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு.

PREV
16
இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பான மாநிலம்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்-இன் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு கும்பகோணத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “நாட்டில், இஸ்லாமிய மக்களான நீங்கள், எப்படிப்பட்ட அச்சுறுத்தலை எதிர்கொள்கிறீர்கள் என்று உலகத்திற்கே தெரியும்! இப்படிப்பட்ட நிலையில், நான் உறுதியோடு சொல்கிறேன், இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக இன்றைக்கு இருக்கும் ஒரே மாநிலம், தமிழ்நாடுதான்! அதற்குக் காரணம், திராவிட முன்னேற்றக் கழகம்! தி.மு.க.தான் சிறுபான்மையின மக்களைக் காக்கும், காவல் அரண்! அதனால்தான், இங்கு உணவு அரசியல் - கும்பல் வன்முறை – போன்றவை இன்றைக்குத் தலையெடுக்காமல் இருக்கிறது!

26
தமிழகத்தின் அமைதி சூழல் கண்களை உறுத்துகிறது

இந்த அமைதிச் சூழல் சிலரின் கண்களை உறுத்துகிறது. தமிழ்நாட்டில் எப்படியாவது குழப்பம் ஏற்படுத்தலாமா என்று அவர்கள் போடும் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிக் கொண்டிருக்கிறது. அதனால், தங்களுக்கு ஏற்ற அடிமைகளாக இருக்கும், E.D. - C.B.I. - I.T. இதுபோன்ற அமைப்புகளை வைத்து மிரட்டி, தங்களுக்கான கூட்டணியாக உருவாக்கி இன்றைக்கு மேடை ஏறியிருக்கிறார்கள்.

36
10 தோல்வி பழனிசாமி

அதிலும், துரோகங்களுக்கான அர்த்தமாக அகராதிகளில் இடம்பிடித்திருக்கும், பத்து தோல்வி பழனிசாமி அவர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்துகொண்டு இருக்கிறார் அவர்! பழனிசாமி அவர்களின் துரோகங்களை நாம் எண்ணிப் பார்த்தால், அது சீனப் பெருஞ்சுவரைப் போன்று நீளமானது! அவருக்குத் தெரிந்ததெல்லாம் இரண்டே இரண்டுதான். ஒன்று - காலில் விழுவது, இன்னொன்று - கால்களை வாரி விடுவது! அப்படிப்பட்டவர் முஸ்லிம் மக்களுக்கு எதிராகச் செய்த துரோகங்களை எல்லாம் சொல்ல வேண்டும் என்றால், அந்தப் பட்டியில் மிகப் பெரியது.

46
குடியுரிம திருத்த சட்டத்தை ஆதரித்த அதிமுக

2019-இல் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறைவேறுவதற்கு, அ.தி.மு.க. அந்த மசோதாவை ஆதரித்தது. உறுதியாகச் சொல்கிறேன், உங்களுக்கும் நன்றாக ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன், அ.தி.மு.க.வின் ஆதரவு இல்லை என்றால், அந்த மசோதா மாநிலங்களைவையில் தோல்வி அடைந்திருக்கும். ஆனால் பழனிசாமி அவர்கள், “அந்தச் சட்டத்தால் யார் பாதிக்கப்பட்டார்கள்?” என்று பா.ஜ.க.விற்கு ஆதரவாக அதிமேதாவித்தனமாகச் சட்டமன்றத்தில் பேசினார். அவைக்குறிப்பில் இடம் பெற்றிருக்கிறது. மறுக்க முடியாது. 2020-இல் அந்தச் சட்டத்துக்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம் மக்கள் போராடியபோது தடியடி நடத்தினார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், திராவிட முன்னேற்றக் கழகம்தான் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, கையெழுத்து இயக்கம் நடத்தினோம்; உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்! இன்னும் சொல்ல வேண்டும் என்றால், அப்போது எதிர்க்கட்சியாக இருந்த நாங்கள், அந்தச் சட்டத்திற்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வாதிட்டோம், போராடினோம். ஆனால், பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு தீர்மானம் நிறைவேற்ற மறுத்தார்கள். ஆனால், 2021-இல் நாம் ஆட்சிக்கு வந்தவுடன் - நாம் பொறுப்பேற்றதும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, தீர்மானம் நிறைவேற்றினோம். அப்போதுகூட, அ.தி.மு.க. அந்தத் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை! பா.ஜ.க.விற்கு பயந்து, தங்களுக்கு நேரம் ஒதுக்கவில்லை என்று பொய்யைச் சொல்லி வெளிநடப்பு செய்தார்கள்.

56
இரட்டை வேடம் போட்ட அதிமுக

முத்தலாக் தடைச் சட்டத்திலும் இரட்டை வேடம் போட்டது அ.தி.மு.க.! அடுத்து, வக்பு சட்டத் திருத்தம்! தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், நாடாளுமன்றத்திலும் - நீதிமன்றத்திலும் கடுமையாகப் போராடினோம்! பிரதமருக்கு நான் கடிதம் எழுதினேன். தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம்! ஆனால், அ.தி.மு.க.வின் லட்சணம் என்ன தெரியுமா? எங்கே மக்கள் முன்னால் அம்பலப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில், அந்தத் தீர்மானத்தை ஆதரித்தாலும் - தங்களின் டெல்லி எஜமானர்கள் கோபித்துக் கொள்வார்களோ என்று, நாம் கொடுத்த கருப்பு பேட்ஜைக்கூட போட்டுக் கொள்ளாமல் ஓடி ஒளிந்தார்கள். சட்டமன்றத்தில் இந்த நாடகம் என்றால், நாடாளுமன்றத்தில் அன்றைக்கு அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை அவர்கள், 11 வினாடிதான் பேசினார். அதிலும், வக்பு மசோதாவை நிராகரிக்க வேண்டும்; முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தாமல், பா.ஜ.க. அரசிடம் கோரிக்கை வைத்துக் கொண்டு இருந்தார்.

66
பச்சை பொய் பேசிய பழனிசாமி

இப்படியெல்லாம் துரோகம் செய்துவிட்டு, ஒரு கூட்டத்தில் பேசும்போது, கூட்டணி தர்மத்திற்கு உட்பட்டு, தங்களுக்குக் கொஞ்சமும் விருப்பம் இல்லாத சட்டங்களுக்கு ஆதரவு அளித்தோம் என்று பச்சைப் பொய்யைப் பேசினார். இப்போது ஒரே மேடையில் நிற்கும் இந்த மக்கள் விரோதக் கூட்டணியை, ஒட்டுமொத்தமாக விரட்ட வேண்டிய கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது! மறந்துவிடாதீர்கள். அதற்கான வலிமை மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்குத்தான் இருக்கிறது! இஸ்லாமியர்கள் – கிறித்துவர்கள் என்று, சிறுபான்மை மக்களுக்கு எதிரான அ.தி.மு.க.வின் சதி எண்ணத்தை நீங்கள் உணர வேண்டும்” என்று பேசினார்.

Read more Photos on
click me!

Recommended Stories