தனியார் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 4 நாட்கள் வீடுகளில் இருந்தே வேலை.! முதலமைச்சர் அதிரடி

First Published | Oct 14, 2024, 1:44 PM IST

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், பேரிடர் மீட்புப் படையினர் பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று முதல் கன மழை  பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக தமிழக முதலமைச்சர் அரசு உயர் அதிகாரிகளுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து 15.10.2024 அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

15.10.2024 முதல் 18.10.2024 வரை தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்த வேண்டும் என கூறியுள்ளார். 
தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளுக்கு முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் மீட்பு படகுகள் இன்றே நிலைநிறுத்தப்பட வேண்டும்.
 

மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுடைய பொறுப்பு மாவட்டங்களுக்கு சென்று, ஆயத்த பணிகளையும், மீட்பு, நிவாரணப் பணிகளையும் மாவட்ட நிருவாகத்துடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களின் வசதிக்காக மெட்ரோ இரயில் மற்றும் பறக்கும் இரயில்களின் சேவைகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். உணவுத் துறை மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயராமல் அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தங்குதடையின்றி ஆவின் நிறுவனம் மூலம் பால் மற்றும் பால் பொருட்கள் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.
 

Tap to resize

Chennai Weather Update

 முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் போதுமான உணவுப் பொருட்களை இருப்பு வைக்க அறிவுறுத்த வேண்டும். நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைப்பதோடு, பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளில் இருந்து முன்கூட்டியே பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும். ரொட்டி, குடிநீர் பாட்டில்கள் நிவாரண மையங்களில் இன்றே இருப்பு வைக்க வேண்டும். மேலும், மருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். மழை வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்படும் போது, பொதுமக்களுக்கு உடனடியாக மாற்று வழித்தடம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

Tamilnadu rain

அனைத்து மாவட்டங்களிலும் சாலைப்பணிகள் நடைபெறும் இடங்களில் இரவு நேரத்தில் போதுமான ஒளிரும் பட்டைகள் மற்றும் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும். மின் உற்பத்தி தடைபடாமல் இருக்கவும், மின் விநியோகம் சீராக இருக்கவும், கட்டுப்பாட்டு மையத்தில் கூடுதலான பணியாளர்கள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். முட்டுக்காடு, பக்கிங்ஹாம் கால்வாய் கலைஞர் கருணாநிதி பாலம் அருகில், ஒக்கியம் மடுவு ஆகிய இடங்களில் நீர்வடிவதற்கான தடைகளை நீக்குவதற்கு போதுமான இயந்திரங்களை இருப்பில் வைக்க வேண்டும். மழை அளவு, அணைகளின் நீர்வரத்து ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்து அணைகளில் நீர் மேலாண்மை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய உத்தரவுகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். 
 

Latest Videos

click me!