Chennai-Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு விரைவுச்சாலைக்கு கைகொடுக்கும் விதமாக மதுரவாயல் முதல் சென்னை வெளிவட்ட சாலை (ORR) வரை பறக்கும் சாலை அமைக்கப்பட உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
தென்னிந்தியாவின் மிக முக்கிய நகரங்களான நமது தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையும், கர்நாடகாவின் தலைநகரான பெங்களூருவும் அமைந்துள்ளன. சினிமா, வர்த்தக தலைமையமான சென்னைக்கும், தொழில்நுட்ப நகரமான பெங்களூருவுக்கும் தினமும் ஏராளமான மக்கள் பயணித்து வருகின்றனர். இந்த இரண்டு நகரங்களுக்கு இடையே வணிகப் போக்குவரத்தும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இப்போது சென்னை டூ பெங்களூரு இடையே செல்ல சுமார் 6 மணி நேரம் முதல் 7 மணி நேரம் ஆகிறது.
சென்னை - பெங்களூரு விரைவுச்சாலை
இந்த நீண்ட பயண நேரத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சென்னை - பெங்களூரு இடையே விரைவுச்சாலை (Expressway) அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சுமார் ரூ.18,000 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் இந்த விரைவுச்சாலையின் மொத்த நீளம் 258 கிலோமீட்டர் ஆகும். இப்போதுள்ள சாலை வழியை விட 50 கிமீ குறைகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா என 3 மாநிலங்கள் வழியே விரைவுச்சாலை செல்ல உள்ளது.
23
மதுரவாயல் முதல் ORR வரை பறக்கும் சாலை
இந்த நிலையில், சென்னை டூ பெங்களூரு விரைவுச்சாலைக்கு கைகொடுக்கும் விதமாக மதுரவாயல் முதல் சென்னை வெளிவட்ட சாலை (ORR) வரை ஒரு புதிய பிரம்மாண்ட பறக்கும் சாலை (Elevated Corridor) அமைக்கப்பட உள்ளது. அதாவது மதுரவாயல் சந்திப்பில்தொடங்கி சென்னை வெளிவட்ட சாலை வரை மொத்தம் 8 கிலோமீட்டர் நீளத்திற்கு இந்தப் பறக்கும் சாலை அமையவுள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்துடன் சர்வதேச தரத்திலான 6-வழிப்பாதையாக அமைக்கப்பட்ட இந்த பறக்கும் சாலைக்கு சுமார் ரூ.991.61 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
டெண்டர் இறுதி செய்யும் பணிகள்
இந்த பறக்கும் சாலை திட்டத்திற்கான தகுதியான கட்டுமான நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான டெண்டர் கோரப்பட்டிருந்தது. இதன் தொழில்நுட்ப மற்றும் நிதி சார்ந்த ஏலங்களைச் சமர்ப்பிப்பதற்கும், அவற்றை ஆய்வு செய்து இறுதி செய்வதற்குமான முக்கிய கட்ட நடவடிக்கைகள் மே 27ம் தேதி மற்றும் மே 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. இந்த இறுதி டெண்டர் நடைமுறை முடிந்தவுடன், விரைவில் கட்டுமானப் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
33
சென்னை டூ பெங்களூரு 3 மணி நேர பயணம்
மதுரவாயல் டூ சென்னை வெளிவட்ட பறக்கும் சாலை பயன்பாட்டுக்கு வந்தால் மதுரவாயல் முதல் பூந்தமல்லி வரையிலான போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை ஈரடுக்கு பறக்கும் சாலை ஏற்கனவே கட்டப்பட்டு வருகிறது. இப்போது பறக்கும் சாலையும் அமைக்கப்பட்டால் சென்னை துறைமுகத்துக்கு இனி எளிதாக சென்றடைய முடியும்.
மதுரவாயல் டூ சென்னை வெளிவட்ட சாலை பறக்கும் சாலை பணிகள் முடிந்து, சென்னை டூ பெங்களூரு விரைவுச்சாலை பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வந்தால் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு வெறும் 3 மணி நேரத்தில் சென்று விட முடியும். இந்த சாலையில் வாகனங்கள் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் செல்ல அனுமதிக்கப்படும் என்பதால் 3 மணி நேர பயணம் சாத்தியமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.