விதிமீறல் சர்ச்சை முதல் பார்க்கிங் பிரச்னை வரை... சென்னை இ.சி.ஆர் தனியார் மதுபான விடுதி மீது எழும் புகார்கள்!

Published : Nov 22, 2026, 10:58 AM IST

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் (ECR) செயல்படும் 'Soak by Bask' மதுபான விடுதி, காலாவதியான உரிமம், பள்ளிகளுக்கு அருகாமையில் அமைப்பு, கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிமீறல்கள் & உரிய அனுமதிகள் இன்றி இயங்குவதாகப் புகார் எழுந்துள்ளது.

PREV
15
கிளப் உரிமத்தில் வணிகரீதியான மதுபான விடுதி?

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் (ECR) செயல்பட்டு வரும் Soak by Bask மதுபான விடுதி, பல்வேறு விதிமீறல்களுடன் இயங்கி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. 3 ஆண்டுகளுக்கும் மேலாகப் புதுப்பிக்கப்படாமல் காலாவதியான நிலையில் இருந்த பழைய மதுபான உரிமம், பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிறகும் முறையாகப் புதுப்பிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், பழைய கட்டிடத்தில் பல்வேறு புதிய கட்டமைப்பு மாற்றங்களும் விரிவாக்கப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தகைய மாற்றங்களுக்குப் பிறகு, புதிய கட்டிட அனுமதிகளையும் சம்பந்தப்பட்ட துறைகளின் ஒப்புதல்களையும் பெற வேண்டியிருந்தும், அவை எதுவும் பெறப்படவில்லை என்பது முக்கியக் குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக, கிளப் பயன்பாட்டிற்காக வழங்கப்படும் மதுபான உரிமத்தைப் பயன்படுத்தி, பொதுமக்களுக்கான வணிகரீதியான மதுபான விடுதி நடத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

25
பள்ளிகளுக்கு அருகாமையும் கடலோர விதிமீறல்களும்

பள்ளிகளுக்கு அருகில் இருக்கும் மதுபானக்கடைகள் மூடப்படும் என அரசு தெரிவித்த நிலையில், ஸ்ரீ சைதன்யா, ஆல்பபெட் இன்டர்நேஷனல் உள்ளிட்ட பள்ளிகளுக்கு அருகில் இந்த மதுபான விடுதி அமைந்துள்ளதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடற்கரையை ஒட்டிய பகுதியில் மதுபானம் வழங்கப்படுவது, பொதுக் கடற்கரையிலிருந்தே மதுபானம் அருந்தும் காட்சிகள் தெரியக்கூடிய வகையில் அமைப்பு இருப்பது மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) விதிகளுக்கு உட்பட்ட பகுதியில் உரிய அனுமதியின்றி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பது எனப் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.

35
அடிப்படை அனுமதிகள் & பாதுகாப்புக் குறைபாடுகள்

இதுதவிர, சென்னை மாநகராட்சி மற்றும் சி.எம்.டி.ஏ (CMDA)-வின் கட்டிட மற்றும் திட்ட அனுமதிகள், கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல், காவல்துறையின் தடையின்மைச் சான்று உள்ளிட்ட அத்தியாவசிய அனுமதிகள் பெறப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. போதிய வாகன நிறுத்துமிட வசதியின்றி வாடிக்கையாளர்களின் வாகனங்கள் பொதுச் சாலைகளில் நிறுத்தப்படுவதுடன், முதல் தளத்தில் உள்ள பால்கனி பகுதியில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் மதுபானம் வழங்கப்படுவதாகவும் புகார்கள் தெரிவிக்கின்றன.

45
காவல்துறை எச்சரிக்கையும் டாஸ்மாக் அனுமதியும்

இந்த விவகாரத்தில் மேலும் அதிர்ச்சியளிக்கும் தகவலாக, முறையான டாஸ்மாக் மதுபானக் கொள்முதல் ஆணை (Indent) பெறப்படுவதற்கு முன்பே, சில வாரங்களுக்கு முன் இந்த விடுதியில் மதுபானம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டறிந்த காவல்துறையினர், விடுதி மேலாளரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, உரிய உரிமம் இன்றி மதுபானம் வழங்கியது தொடர்பாக எச்சரித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இத்தகைய சம்பவம் நடைபெற்ற பிறகும், இந்த விடுதிக்காக டாஸ்மாக் நிறுவனத்தில் முறையான Login ஏற்படுத்தப்பட்டு, மதுபானக் கொள்முதலுக்கான 'Indent' வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேவையான துறைசார் அனுமதிகள் மற்றும் உரிம நடைமுறைகள் முழுமையடையாத நிலையில், டாஸ்மாக் எவ்வாறு இந்த அனுமதியை வழங்கியது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

55
எழுப்பப்படும் முக்கியக் கேள்விகள்

இதற்கிடையே, கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து மதுபானம் வழங்கப்பட்டு வருவதுடன், பார்ட்டி நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இத்தனை விதிமீறல் புகார்கள் எழுந்துள்ள நிலையில், 3 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயலற்ற நிலையில் இருந்த உரிமம் எவ்வாறு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது? பழைய கட்டிடத்தில் புதிய கட்டமைப்பு மாற்றங்கள் செய்யப்பட்ட பிறகும், உரிய அனுமதிகள் பெறப்படாமல் மதுபான விடுதி செயல்படுவது எப்படி? காவல்துறையினரே எச்சரித்த பிறகும், டாஸ்மாக் மூலம் மதுபானக் கொள்முதலுக்கான அனுமதி எப்படி வழங்கப்பட்டது? என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

இந்த விவகாரத்தின் பின்னணியில் யாருடைய செல்வாக்கு செயல்படுகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ள நிலையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, மாவட்ட நிர்வாகம், காவல்துறை, மாநகராட்சி, சி.எம்.டி.ஏ (CMDA) மற்றும் கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஆகிய துறைகள் இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி விளக்கம் அளிக்குமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories