3 Free LPG Cylinders: தமிழகத்தில் ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் திட்டத்திற்கான பயனாளிகள் பட்டியலைத் தயாரிக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. யாருக்கெல்லாம் கிடைக்கும்? என்பதை பார்க்கலாம்.
தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் எனத் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. இதன் முதல் கட்டமாக ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்தார். 'அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 1 கோடியே 30 லட்சத்து 16 ஆயிரத்து 104 குடும்பங்கள் பயன்பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆண்டுதோறும் சுமார் ரூ.4,000 கோடி ஒதுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. வரும் 2027 பொங்கல் முதல் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
25
உஜ்வாலா, மகளிர் உரிமைத்தொகை பெறுவோருக்கு வாய்ப்பா?
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெற்றவர்கள், மாதந்தோறும் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை பெறும் குடும்பங்கள் ஆகியோரின் விவரங்களை அரசு பரிசீலித்து வருகிறது. இதன் அடிப்படையில் தகுதியான பயனாளிகளை அடையாளம் காணும் பணிகள் நடைபெறுகின்றன. இருப்பினும், உஜ்வாலா திட்டப் பயனாளிகள் அல்லது மகளிர் உரிமைத்தொகை பெறுவோர் மட்டுமே இந்தத் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று இறுதி விதிமுறை அறிவிக்கப்படவில்லை. இவர்கள் தொடர்பான விவரங்கள் பயனாளிகளைத் தேர்வு செய்வதற்கான அடிப்படைத் தரவுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் வரை இருந்தால் கிடைக்குமா?
முதல்வர் சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமல் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள் இத்திட்டத்தில் பயன்பெறத் தகுதியுடையவர்கள். மேலும், சிறு மற்றும் குறு விவசாயக் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட குடும்பங்கள் உள்ளிட்ட சமூகத்தில் பாதிப்புக்குள்ளாகும் பிரிவினரும் பயனாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனால், வருமானம் மட்டுமின்றி குடும்பத்தின் சமூக மற்றும் பொருளாதார நிலையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படலாம். ஆனால், இறுதி பயனாளிகள் பட்டியல் மற்றும் தகுதி தொடர்பான விரிவான நடைமுறைகள் இன்னும் வெளியாகவில்லை.
இந்தத் திட்டத்தில் அரசு நேரடியாக வீடுகளுக்கு சிலிண்டர்களை வழங்காது. வழக்கம்போல எண்ணெய் நிறுவனங்களின் முகவர்கள் மூலம் பயனாளிகள் சிலிண்டரை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். சிலிண்டர் வாங்கிய விவரங்களை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து அரசு பெற்றுக்கொள்ளும். அதன் அடிப்படையில் தகுதியான பயனாளிகளின் வங்கிக் கணக்கில் சிலிண்டருக்கான தொகை நேரடியாகச் செலுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதனால், சிலிண்டர் வாங்கிய பிறகு அதற்கான தொகையைத் திரும்பப் பெறும் முறையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
55
விண்ணப்பிக்க வேண்டுமா?
தமிழகத்தில் தற்போது சுமார் 2.40 கோடி வீட்டு சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளதாக வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் சுமார் 1.10 கோடி குடும்பங்களுக்கு ஒரு சிலிண்டர் இணைப்பு உள்ளது; அவற்றில் 42 லட்சம் இணைப்புகள் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டவை எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே உள்ள அரசு நலத்திட்டப் பயனாளிகளின் விவரங்களைக் கொண்டு பட்டியல் தயாரிக்கப்படுவதுடன், பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்று தேர்வு செய்யவும் வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது. எனவே, விண்ணப்ப முறை, தேவையான ஆவணங்கள், இறுதித் தகுதி உள்ளிட்ட விவரங்கள் வெளியாகும் வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் கவனிப்பது அவசியம்.