
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டார். இதில் விஜய் மட்டும் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் விசில் சின்னத்தில் போட்டியிட்டார். இதே போன்று மற்ற தொகுதிகளிலும் விஜய்யின் தவெக கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கோட்டை என்று சொல்லப்படும் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் கடைசி நேரத்தில் எஸ்கேப் ஆன நிலையில் அந்த தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளரை விஜய் ஆதரித்தார்.
தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளும்மான தேர்தல் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி வெற்றிகரமாக நடந்து முடிந்து கிட்டத்தட்ட 85 சதவிகித வாக்குகள் பதிவாகின. இந்த நிலையில் தான் தேர்தல் முடிந்து ஒரு வாரத்திற்கு பிறகு பல்வேறு நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி திமுக தான் ஆட்சி அமைக்கும் என்று பல்வேறு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இருந்தபோதிலும் விஜய்யின் தவெக கட்சியும் பல இடங்களில் வெற்றி வாகை சூடும் என்று கருத்துகணிப்பு முடிவு தெரிவித்துள்ளது. அதிலேயும், Axis My India (India Today) நடத்திய கருத்துக் கணிப்பில் விஜய் பெருவாரியான தொகுதிகளில் அதாவது, 98 முதல் 120 இடங்களில் முன்னிலை பெறும் என்று தெரிவித்துள்ளது. இதே போன்று திமுக 125 முதல் 145 இடங்கள் வரையிலும், அதிமுக 60 முதல் 70 இடங்கள் வரையிலும் முன்னிலை பெறும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
ஆனால், மற்ற நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளின் அடிப்படையில் Praja Poll தவெக 1 முதல் 9 இடங்கள், P-Marq தவெக 16 முதல் 26 இடங்கள், Kamakhya Analytics தவெக 67-81, JVC தவெக 8-15 இடங்கள் என்று முடிவுகள் தெரிவித்துள்ளன. ஒருவேளை விஜய் 37 இடங்களில் அவரால் முதல்வராக முடியுமா என்பது குறித்து பார்க்கலாம்.
தமிழக சட்டமன்ற விதிகளின்படி, விஜய் முதலமைச்சராக 37 இடங்கள் என்பது போதுமானதல்ல. தமிழ்நாடு சட்டமன்றத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி அல்லது கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டுமெனில், மொத்த இடங்களில் 50 சதவீதத்திற்கும் மேலாக, அதாவது குறைந்தபட்சம் 118 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) 37 இடங்களைப் பெற்றால், கூட்டணி ஆட்சி: த.வெ.க-வுடன் மற்ற கட்சிகள் இணைந்து, மொத்த எண்ணிக்கை 118-ஐத் தாண்டினால் மட்டுமே விஜய்யால் முதலமைச்சராக முடியும். ஆனால், பெரிய கட்சிகள் அவருக்கு ஆதரவு தருமா என்பது அரசியல் சூழலைப் பொறுத்தது.
தொங்கு சட்டமன்றம்: எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், மிக அதிக இடங்களைப் பெற்ற கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரும். அப்போது மற்ற கட்சிகளின் ஆதரவு மிக முக்கியம்.
சமீபத்திய கருத்துக்கணிப்புகள் மற்றும் எக்ஸிட் போல் (Exit Polls) முடிவுகளின்படி, தமிழக வெற்றிக் கழகம் ஒரு முக்கியமான சக்தியாக உருவெடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 37 இடங்கள் என்பது ஒரு புதிய கட்சிக்கு மிகப்பெரிய பலம் என்றாலும், தனித்து ஆட்சி அமைக்கவோ அல்லது நேரடியாக முதலமைச்சராகவோ அது போதாது. மற்ற கட்சிகளின் ஆதரவு இல்லாமல் 37 சீட்களை வைத்துக்கொண்டு ஆட்சி அமைக்க முடியாது.
இதற்கு உதாரணமாக 224 தொகுதிகள் கொண்ட கர்நாடகாவில் கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவைப்பட்ட சூழலில் பாஜக 104 இடங்களிலிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், ஜனதா தளம் 37 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதையடுத்து காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க ஜனதா தளம் கட்சி வேட்பாளர் குமாரசாமி முதல்வர் பதவி கேட்டார். கர்நாடகாவில் பாஜக வரக் கூடாது என்பதற்காக காங்கிரஸ் ஜனதா தள கட்சியுடன் கூட்டணி வைத்து (78+37=115) பெரும்பான்மையை நிரூபித்தது. 37 இடங்களில் வெற்றி பெற்ற ஜனதா தளம் வேட்பாளர் குமாரசாமிக்கு முதல்வர் பதவி கொடுத்து காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது.
இதே போன்று தமிழகத்திலும் அதிமுக மற்றும் தவெக கூட்டணி வைத்து விஜய் முதல்வர் ஆகும் சூழல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. கடந்த முறை அதிமுக 75 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், இந்த முறை கூடுதலாக 10 இடங்களில் வெற்றி பெற்று 85 இடங்கள் ஜெயித்தால், தவெகா 35 இடங்களில் வெற்றி பெற்றால் கூட அதிமுக, தவெக கூட்டணியில் (120) இடங்கள் கிடைக்கும். இதன் மூலமாக விஜய் முதல்வராக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.